சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.13 திருக்கோழம்பம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கோகுலேசுவரர், தேவியார் – சவுந்தரியம்மை.

பண்இந்தளம்

132

நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்
ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்
கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்பம் மேவிய
ஏற்றானை யேத்துமின் நும்மிடர் ஏகவே.-01

133

மையான கண்டனை மான்மறி யேந்திய
கையானைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய
செய்யானைத் தேன்நெய்பா லுந்திகழ்ந் தாடிய
மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே.-02

134

ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும்
வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய
காதனைக் கடிபொழிற் கோழம்பம் மேவிய
நாதனை யேத்துமின் நும்வினை நையவே.-03

135

சடையானைத் தண்மல ரான்சிர மேந்திய
விடையானை வேதமும் வேள்வியு மாயநன்
குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம்
உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே.-04

136

காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணி
தாரானைத் தையலோர்பால்மகிழ்ந் தோங்கிய
சீரானைச் செறிபொழிற் கோழம்பம் மேவிய
ஊரானை யேத்துமின் நும்மிடர் ஒல்கவே.-05

137

பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியை
விண்டார்கள் தம்புரம் மூன்றுட னேவேவக்
கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக்
கொண்டானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.-06

138

சொல்லானைச் சுடுகணை யாற்புரம் மூன்றெய்த
வில்லானை வேதமும் வேள்வியு மானானைக்
கொல்லானை உரியானைக் கோழம்பம் மேவிய
நல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே.-07

139

விற்றானை வல்லரக் கர்விறல் வேந்தனைக்
குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச்
செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம்
பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே.-08

140

நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்
படியானைப் பண்டரங்க வேடம்ப யின்றானைக்
கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின்
கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.-09

141

புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்
பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்
கொத்தலர் தண்பொழிற் கோழம்பம் மேவிய
அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே.-10

142

தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்
நண்புடை ஞானசம் பந்தன்நம் பானுறை
விண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவை
பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.-11

திருச்சிற்றம்பலம்