சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.12 திருவேகம்பம்

பண்இந்தளம்

121

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.-01

122

நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை
நச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே.-02

123

பாராரு முழவமொந் தைகுழல் யாழொலி
சீராலே பாடலா டல்சிதை வில்லதோர்
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்
சேராதார் இன்பமா யந்நெறி சேராரே.-03

124

குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்
மின்றேய்க்கு முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பஞ்
சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே.-04

125

சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தங்
கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்
புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.-05

126

மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தங்
கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பந்
தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.-06

127

விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார்
கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்
தண்ணலா ராடுகின் றவலங் காரமே.-07

128

தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.-08

129

நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார்
பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும்
மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே.-09

130

போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியாற் றொழுமினும் மேல்வினை நில்லாவே.-10

131

அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்
கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால்
சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே.-11

திருச்சிற்றம்பலம்