சோழநாட்டு பூம்புகார் நகரத்தில் வணிகர் குலத்தில் தோன்றியவர் இயற்பகை நாயானர். இவர், சிவனடியார் எது கேட்டாலும் இல்லையென்னாது வழங்கும் இயல்புடையவராய் வாழ்ந்தார். சிவபெருமான் எதனையும் இல்லை என்னாது சிவனடியார்க்கு ஈயும் இவரது அடியார் பக்தியினை உலகத்தார்க்கு வெளிப்படுத்த எண்ணிக் காம உணர்வுடைய வேதியராக இயற்பகையார் இல்லத்தை அடைந்தார். “இல்லை என்னாது கொடுக்கும் இயற்பகையாரே, நாம் உமது மனைவியைப் பெறவேண்டி இங்கு வந்தோம்” என வேதியர் கேட்டார். இயற்பகையார் “நம்மிடத்தில் உள்ள பொருளையே இவர் கேட்டார்” என எண்ணி உளம் மகிழ்ந்து அடியாரை வணங்கித் தம் மனைவியை அவர்க்கு கொடுத்து அனுப்பினார். அதனைக் கேட்ட மானமுடைய அவர் தம் சுற்றத்தார் காமுக வேதியரைத் தடுத்து எதிர்த்தனராக, இயற்பகையார் சுற்றத்தார்களை வாளால் வீழ்த்தி வேதியரை மாதினொடு வழியனுப்பிவிட்டு வீட்டிற்குத் திரும்பினார். அந்நிலையில் வேதியராய் வந்த இறைவர் “இயற்பகை முனிவா ஓலம், ஈண்டு நீ வருவாய் ஓலம், என ஓலமிட்டழைத்தவர் இயற்பையாரும் “இதோ வந்தேன்” என்று விரைந்து திரும்புமுன், வேதியராய் வந்த இறைவர் மறைந்தார். விடையின் மீது அம்மையப்பராய் தோன்றிக் காட்சியளித்து இயற்பகை நாயனார்க்கும் அவர் மனைவியார்க்கும் இறந்த சுற்றத்தார்களுக்கும் வீடு பேற்றை நல்கியருளினார்.

திருச்சிற்றம்பலம்