சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருமூலர் பெருமான் அருளிய பத்தாம் திருமுறை

திருமந்திரம்

1237 பதிகங்கள் – 3000 பாடல்கள் 


10.2 இரண்டாம் தந்திரம் 03. இலிங்க புராணம்


347.
அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே

348.
திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே

349.
ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்க் கவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே

350.
தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நொ஢த்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே

351.
உறுவது அறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே

352.
ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமேன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.


திருச்சிற்றம்பலம்