சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருமூலர் பெருமான் அருளிய பத்தாம் திருமுறை

திருமந்திரம்

1237 பதிகங்கள் – 3000 பாடல்கள் 


10.2 இரண்டாம் தந்திரம் 05.. பிரளயம்


10.2 இரண்டாம் தந்திரம் 05.. பிரளயம்

362.
கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே

363.
அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்டு
உலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே

364.
தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.

365.
சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே

366.
பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே


திருச்சிற்றம்பலம்