மெய்ப்பொருள் நாயனார்

சேதி நாட்டின் தலைநகராகத் திகழ்வது திருக்கோவலூர். அவ்வூரில் மலயமான் மரபின் வழிவந்த மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்தார். அவர் சினடியர்களின் திருவேடத்தையே மெய்ப்பொருள் எனக் கொண்டு போற்றி வந்தமையால் மெய்ப்பொருள் நாயனார் எனப் பெயர் பெற்றார்.

இவ்வரசர்க்குப் பகைவன் முத்தநாதன். இவன் பலமுறை படையொடு வந்து எதிர்த்து இவரொடு போர் செய்து தோல்வியுற்றான். அதனால் வஞ்சனையால் மெய்ப்பொருளாரை வெல்லச் சூழ்ச்சி செய்தான்.

சிவனடியார் வேடம் பூண்டு உடைவாளைப் புத்தகப் பையில் மறைத்துக் கொண்டு மெய்ப்பொருள் நாயனாரது அரண்மனையை அடைந்தான். காவலர் தடையை மீறி அரசர் தேவியாருடன் அமர்ந்த இடத்தை அணுகி அசரரை நோக்கி “எங்குமில்லாத சிவாகம நூல் கொண்டுவந்துள்ளேன்” என்றான்.

அதனை விரித்து அருள் செய்யும் என அரசர் வேண்ட, அரசியாரை அப்புறம் செல்லும்படி செய்து புத்தகப்பையினை அவிழ்ப்பவன் போன்று வாளினை எடுத்து முத்தநாதனை முன்னே தான் செய்ய நினைத்த கொடுஞ்செயலைச் செய்து முடித்தான்.

அதனையறிந்த தத்தன் என்னும் வாயில் காவலன் முத்தநாதனை வெட்டுவதற்கு வாளையெடுத்தான். உயிர் பிரியும் நிலையினராகிய மெய்ப்பொருளார் தடுத்து நிறுத்தி, “தத்தா, நமர். இவரை நகருக்கு வெளியெ இடையூறின்றி விட்டு வருக” என்று பணித்து வீழ்ந்தார்.

தத்தனும் வஞ்சகனாகிய முத்தநாதனை ஊருக்கு வெளியெ அனுப்பிவிட்டு விரைந்து வந்து தெரிவித்தான். அதுவரை உயிர் தாங்கியிருந்த மெய்ப் பொருள் நாயனார் திருநீற்றின் மீதும் சிவவேடத்தின் மீதும் வைத்த அன்பினைப் பாதுகாக்கும்படி யாவர்க்கும் எடுத்துக் கூறித் தில்லைச்சிற்றம்பலவரைப் போற்றிச் சிவப்பேற்றை அடைந்தார்.

திருச்சிற்றம்பலம்