விறன்மிண்ட நாயனார்

சேரரது மலைநாட்டில் திருச்செங்குன்றூரில் வேளாளர் மரபில் தோன்றியவர் விறன்மிண்டர். சிவனடியார் பெருமையைப் பேணும் நோக்குடைய இவர் திருவாரூரை அடைந்து சிவனடியார்களுடன் தேவாசிரிய மண்டபத்தில் தங்கி ஆரூர் பெருமானை வழிபட்டிருந்தார்.

பரவையார் கணவராகிய சுந்தரமூர்த்தி நாயானார் புற்றிடங்கொண்ட பெருமானை வழிபடத் திருக்கோயிலில் நுழைபவர் தேவாசிரிய மண்டபத்திலுள்ள சிவனடியார்களை முதலில் வழிபடாது ஒருபுறமாக ஒதுங்கிச் சென்றார்.

அதனைக் கண்ணுற்ற விறன்மிண்ட நாயானார். “சிவனடியார் திருக்கூட்டத்தை வழிபடாது செல்லும் வன்தொண்டனும் அவனுக்கு அருள் செய்யும் ஆரூர் இறைவரும் அடியார்களுக்குப் புறகு” என வெகுண்டுரைத்தார்.

அந்நிலையிற் புற்றிடங்கொண்ட பெருமான் வன்தொண்டர்க்கு எதிரே தோன்றித் திருத்தொண்டர் பெருமையை விரித்துக் கூற “தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என அடியெடுத்துக் கொடுத்தருள நம்பியாரூரரும் திருத்தொண்டத்தொகைத் திருப்பதிகத்தினைப் பாடிக்கொண்டு சிவனடியார்களைப் போற்றிப் பரவினார்.

அதனை உளங்குளிரக் கேட்டு விறன்மிண்ட நாயாணார் ஆரூர் இறைவரையும் நம்பியாரூரையும் உவந்து போற்றினார். இவ்வாறு அடியார் பெருமையினை உலகறியச் செய்த விறன்மிண்ட நாயணார் சிவகணத்தலைவர்களுள் ஒருவராகத் திகழும் பேறு பெற்றார்.

திருச்சிற்றம்பலம்