கொங்கு நாட்டுக் கருவூரில் ஆனிலை என்னும் திருக்கோயிலில் எழுந்தருளிய இறைவனை வழிபடும் இயல்பினர். சிவனடியார்களுக்கு ஓர் இடர் வந்துள்ள இடத்திற்கே சென்று உதவும் பண்புடையவர்.

அடியார்களுக்கு தீங்கு புரியும் கொடியோரை எறிந்து தண்டித்தல் வேண்டிக் கையில் பரசு என்னும் மழுப் படையினை ஏந்தியவர். அதனால் எறிபத்தர் என அழைக்கப்பெற்றார்.

கருவூர் திருவானிலைத் திருக்கோயிலில் பெருமானுக்குப் பூத்தொண்டு புரியும் சிவகாமி ஆண்டார் என்பவர் வைகறையில் திருநந்தன வனத்திற்குச் சென்று மலர் கொய்து பூக்குடலையில் நிறைத்து அக்குடலையினைத் தண்டின்மேல் உயரப் பிடித்துக்கொண்டு திருக்கோயில் நோக்கி விரைந்து சென்றார்.

மகாநவமியின் முதல் நாளான அன்று அந்நகரில் அரசு வீற்றிருக்கும் புகழ்ச்சோழரது பட்டத்து யானை ஆற்றில் நீராடிப் பாகர்க்கு அடங்காது மதச்செருக்குடன் திரும்பும் போது சிவகாமியாண்டார் கையிலுள்ள பூக்குடலையைப் பறித்துச் சிதறியது. பாகர், யானையை விரைந்து ஒட்டிச் சென்றனர்.

பூக்குடலை சிதறினமையால் சிவகாமியாண்டார் “சிவதா சிவதா” என்ற ஓலமிட்டு அரற்றினார். அவ்வொலியினைக் கேட்டு அங்கு ஒடிவந்த எறிபத்தர் வெகுண்டு விரைந்தோடி யானையையும் பாகர் ஐவரையும் மழுப்படையால் கொன்று வீழ்த்தினார்.

பட்டத்து யானையும் பாகரும் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட புகழ்ச்சோழர் பகைவர் செயலோ இதுவென ஐயுற்றுப் படையுடன் புறப்பட்டார். யானையும் பாகரும் இறந்து கிடக்கும் இடத்தில் சிவனடியார் ஒருவர் மட்டுமே மழுப்படையினைத் தாங்கி நிற்பதை கண்டார். “சிவனடியாராகிய இவர், குற்றஞ்செய்தாலல்லது பாகர் முதலியோரைக் கொன்றிருக்க மாட்டார். ஏதோ இங்குத் தவறு நடந்திருத்தல் வேண்டும்” எனக் கருதி எறிபத்தரை அணுகினார்.

அவர் நிகழ்ந்தது கூறக் கேட்டு “ஐயனே, யானையும் பாகரும் செய்த குற்றத்துக்கு யானும் பொறுப்புடையேன். ஆதலின் என்னையும் இவ்வாளினால் கொல்லுதல் வேண்டும்” எனக் கூறித் தமது உடைவாளை எறிபத்தர் கையிற் கொடுத்தார்.

அதனை வாங்கிக் கொண்ட எறிபத்தர் அரசரது பேரன்பின் திறத்தினை எண்ணி அவரது உள்ளம் வருந்த நடந்து கொண்டமைக்குப் பெரிதும் வருந்தி அவரிடமிருந்து தாம் வாங்கிக்கொண்ட வாளினால் தமது கழுத்தை அறுத்துக் கொள்ள முற்பட்டார்.

அது கண்டு பதைப்புற்ற புகழ்ச்சோழர், எறிபத்தர் கையைப் பிடித்துக் தடுத்தார். அப்பொழுது “அன்புடையீர், உங்கள் தொண்டின் பெருமையை உலகறியும் பொருட்டு யானை பூக்குடலையைச் சிந்தியது,” என வானத்தில் அசரீரி எழுந்தது. இறந்துகிடைந்த பாகர்களோடு பட்டத்து யானையும் உயிர் பெற்றெழுந்தது. எறிபத்த நாயனார் அன்புடைய அடியார்களது இடர்களுயும் ஆண்மைத் திருத்தொண்டின் பயனாகத் திருக்கயிலாயத்தில் சிவகணத் தலைவராகும் பேறு பெற்று விளங்கினார்.

திருச்சிற்றம்பலம்