ஏனாதிநாத நாயனார்

சோழ நாட்டில் எயினனூரில் சான்றார் குலத்தில் தோன்றியவர் ஏனாதி நாதர். திருநீற்றுத் தொண்டில் ஈடுபட்ட இவர், அரசர்கட்கு வாட்போர்ப் பயிற்சி அளிக்கும் ஆசிரியத் தொழிலுரிமை உடையவராய் இருந்தார். அதில் வரும் ஊதியத்தால் சிவனடியார்களை உபசரித்துப் போற்றி வந்தார்.

இவரை போன்றே வாட்போர்ப் பயிற்சி அளிக்கும் அதிசூரன் என்பவன் இவர் மேல் பொறாமையுடையவனாய் “வாய்  கொண்ட தாயம் வன்மையுடையாரே கொள்வது” எனக் கூறி இவரை வலிய போருக்கு அழைத்தான். “நாம் இருவரும் சேனைகளை அணி வகுத்துப் போர் செய்யமிடத்து வெற்றியடைந்தார் யாரோ அவரே வாள் பயிற்றும் உரிமையைக் கொள்ள வேண்டும்” என்றான். ஏனாதி நாதரும் இசைந்தார்.

இருவருக்கும் இடையே நிகழ்ந்த போரில் அதிசூரன் தோற்ற ஓடினான். தோல்வியுற்ற அவன் ஏனாதி நாதரை வஞ்சனையாற் கொல்ல எண்ணினான். “நம் இருவர்க்கும் துணை வருவார் யாருமின்றி நாம் இருவர் மட்டுமே நாளை விடியற்காலை குறித்த வேறு ஒரு இடத்தில் போர் செய்வோம்” என ஏனாதி நாதர்க்குச் சொல்லி அனுப்பினான்.

அதற்கிசைந்த ஏனாதி நாதர் மறுநாள் “விடியற்காலை தனியராய் வாளுடன் சென்று அவன் குறித்த இடத்தில் அவனது வரவை எதிர்பார்த்து நின்றார். திருநீறணிந்த நெற்றியினரை எவ்விடத்தும் கொல்லாத இயல்புடையார் ஏனாதி நாதர் என்பதனை அறிந்த அதிசூரன் இதற்குமுன் என்றுமே திருநீறிடாதவன் அன்று வெண்ணீறு நெற்றியில் விளங்கப் பூசி நெஞ்சத்தே வஞ்சனையாகிய கறுப்பினையுட் கொண்டு தன் முகத்தைக் கேடகத்தால் மறைத்துக் கொண்டு ஏனாதிநாதர் எதிரே விரைந்து சென்றான்.

ஏனாதி நாதர் போர் செய்ய முற்பட்ட அளவில் கேடகத்தைச் சிறிது விலக்கிய நிலையில் நீறணிந்த அவன் முகத்தைத் கண்ட ஏனாதி நாதர், “இவர் சிவபெருமானுக்கு அடியவராகிவிட்டார். இவர் குறிப்பின் வழியே நிற்பேன்” என வாளையும் பலகையையும் கையிற்படித்தபடி போர் செய்வார் போல் வறிதே நின்றார். அந்நிலையில் அதிசூரனும் அவரைக் கொலைசெய்ய எண்ணியதன் கருத்தினை எளிதில் நிறைவேற்றிக் கொண்டான்.

சிவபெருமான் பகைவனது கைவாளால் பாசம் அறுத்தருளிய ஏனாதிநாதர்க்கு எதிர் தோன்றி என்றும் பிரியாப் பேறளித்து மறைந்தருளினார்.

திருச்சிற்றம்பலம்