இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அருணாசலேசுவரர்,  தேவியார் – உண்ணாமுலையம்மை

பண் – நட்டபாடை

97

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.        1.10.1

98

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுவன்மிசை சிறுநுண்துளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழில் அண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.          1.10.2

99

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ் கழைமுத்தஞ்
சூலிம்மணி தரைமேல்நிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழில் அண்ணாமலை அண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.              1.10.3

100

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவும் எருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை இளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல்
அதிருங்கழல் அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.          1.10.4

101

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புனல் உடனாவதும் ஓரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.        1.10.5

102

பெருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே.          1.10.6

103

கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய இறைவர்க்கிடம் இனவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.        1.10.7

104

ஒளிறூபுலி அதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரல் மதவாரணம் வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட அடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.           1.10.8

105

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவணம் அழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்உமை தலைவன்னடி சரணே.             1.10.9

106

வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும்
மார்வம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்தம் உரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையான்நல கழல்சேர்வது குணமே.     1.10.10

107

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே. 1.10.11

திருச்சிற்றம்பலம்