சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.103 திருக்கழுக்குன்றம்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வேதகிரீசுவரர், தேவியார் – பெண்ணினல்லாளம்மை.

பண் – குறிஞ்சி

1112-

தோடுடையானொரு காதில்தூய குழைதாழ
ஏடுடையான் தலைகலனாக இரந்துண்ணும்
நாடுடையான் நள்ளிருள்ஏம நடமாடுங்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.-1.103.1

1113-

கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகங்
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.-1.103.2

1114

தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்துங்
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.-1.103.3

1115

துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணின்நல்லாளை யொருபாகம்
இணையல்செய்யா இலங்கெயின்மூன்றும் எரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.-1.103.4

1116

பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.-1.103.5

1117

வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லாம் உள்கிநின்றாங்கே உடனாடுங்
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.-1.103.6

* இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.-1.103.7

1118

ஆதல்செய்தான் அரக்கர்தங்கோனை அருவரையின்
நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகங்
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.-1.103.8

1119

இடந்தபெம்மான் ஏனமதாயும் அனமாயுந்
தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம்
மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.-1.103.9

1120

தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாஞ்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கியர்
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.-1.103.10

1121 கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடியபத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.-1.103.11

திருச்சிற்றம்பலம்