சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.110 திருவிடைமருதூர்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மருதீசர், தேவியார் – நலமுலைநாயகியம்மை.

பண் – வியாழக்குறிஞ்சி

1185

மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே.-1.110.1

1186

தோற்றவன் கேடவன் துணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே.-1.110.2

1187

படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவில் ஏற்றினன் ஞாலமெல்லாம்
முடைதலை இடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை யெம்மிறையே.-1.110.3

1188

பணைமுலை உமையொரு பங்கனொன்னார்
துணைமதில் மூன்றையுஞ் சுடரில்மூழ்கக்
கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநகர் இடைமருதே.-1.110.4

1189

பொழிலவன் புயலவன் புயலியக்குந்
தொழிலவன் துயரவன் துயரகற்றுங்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநகர் இடைமருதே.-1.110.5

1190

நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட
இறையவன் வளநகர் இடைமருதே.-1.110.6

1191

நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொ டமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநகர் இடைமருதே.-1.110.7

1192

தருக்கின அரக்கன தாளுந்தோளும்
நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
றுரித்தவன் ஒன்னலர் புரங்கள்மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே.-1.110.8

1193

பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
வரியர வணைமறி கடற்றுயின்ற
கரியவன் அலரவன் காண்பரிய
எரியவன் வளநகர் இடைமருதே.-1.110.9

1194

சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியில் உரையவை பொருள்கொளாதே
அந்தணர் ஓத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநகர் இடைமருதே.-1.110.10

1195

இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொ டோ ங்குவரே.-1.110.11

திருச்சிற்றம்பலம்