சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.116 திருநீலகண்டம்

இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது.

பண் – வியாழக்குறிஞ்சி

1249

அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற் போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.-1.116.1

1250-

காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.-1.116.2

1251-

முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற் றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.-1.116.3

1252

விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.-1.116.4

1253

மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.-1.116.5

1254

மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.-1.116.6

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.-1.116.7

1255

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.-1.116.8

1256

நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும் முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.-1.116.9

1257

சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.-1.116.10

1258

பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில் இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடுங் கூடுவரே.-1.116.11

திருச்சிற்றம்பலம்