சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.121 திருவிடைமருதூர் – திருவிராகம்

பண் – வியாழக்குறிஞ்சி

1304

நடைமரு திரிபுரம் எரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன்
புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய
இடைமரு தடையநம் இடர்கெடல் எளிதே.-1.121.1

1305

மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்
குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரியணல் இடமிடை மருதே.-1.121.2

1306

அருமையன் எளிமையன் அழல்விட மிடறினன்
கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்
பெருமையன் சிறுமையன் பிணைபெணொ டொருமையின்
இருமையும் உடையணல் இடமிடை மருதே.-1.121.3

1307

பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன்
வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடையணல் இடமிடை மருதே.-1.121.4

1308

வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநல முலையிணை பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர்
இருநல புகழ்மல்கும் இடமிடை மருதே.-1.121.5

1309

கலையுடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலையுடை மடமகள் தனையிடம் உடையோன்
விலையுடை அணிகலன் இலனென மழுவினொ
டிலையுடை படையவன் இடமிடை மருதே.-1.121.6

1310

வளமென வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமணல் அணைகரை யிசைசெயும் இடைமரு
துளமென நினைபவர் ஒலிகழல் இணையடி
குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.-1.121.7

1311

மறையவன் உலகவன் மதியவன் மதிபுல்கு
துறையவன் எனவல அடியவர் துயரிலர்
கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை
இறையவன் உறைதரும் இடமிடை மருதே.-1.121.8

1312

மருதிடை நடவிய மணிவணர் பிரமரும்
இருதுடை யகலமொ டிகலின ரினதெனக்
கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
எருதுடை யடிகள்தம் இடமிடை மருதே.-1.121.9

1313

துவருறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவருறு சிறுசொலை நயவன்மின் இடுமணல்
கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும்
அவருறு வினைகெடல் அணுகுதல் குணமே.-1.121.10

1314

தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த
படமலி தமிழிவை பரவவல் லவர்வினை
கெடமலி புகழொடு கிளரொளி யினரே.-1.121.11

திருச்சிற்றம்பலம்