சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.123 திருவலிவலம் – திருவிராகம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மனத்துணைநாதர், தேவியார் – வாளையங்கண்ணியம்மை.

பண் – வியாழக்குறிஞ்சி

1326

பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.-1.123.1

1327

இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு
பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.-1.123.2

1328

உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு
மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.-1.123.3

1329

அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு
புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும்
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.-1.123.4

1330

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.-1.123.5

1331

தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.-1.123.6

1332

நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.-1.123.7

1333

இரவணன் இருபது கரமெழில் மலைதனின்
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை யிறையே.-1.123.8

1334

தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே.-1.123.9

1335

இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைமலி மதில்வலி வலமுறை யிறையே.-1.123.10

1336 மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே.-1.123.11

திருச்சிற்றம்பலம்