சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.124 திருவீழிமிழலை – திருவிராகம்

இவ்விரண்டும் சோழநாட்டிலுள்ளவை. புகலி என்பது சீகாழிக்கொருபெயர்
வீழிமிழலையில் சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை

பண் – வியாழக்குறிஞ்சி

1337

அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிடம் மகிழ்பவர்
நலம்மலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ்
நிலமலி மிழலையை நினையவ லவரே.-1.124.1

1338

இருநில மிதன்மிசை யெழில்பெறும் உருவினர்
கருமலி தருமிகு புவிமுதல் உலகினில்
இருளறு மதியினர் இமையவர் தொழுதெழு
நிருபமன் மிழலையை நினையவ லவரே.-1.124.2

1339

கலைமகள் தலைமகன் இவனென வருபவர்
அலைமலி தருபுனல் அரவொடு நகுதலை
இலைமலி யிதழியு மிசைதரு சடையினர்
நிலைமலி மிழலையை நினையவ லவரே.-1.124.3

1340

மாடமர் சனமகிழ் தருமனம் உடையவர்
காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை
பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில்
நீடமர் மிழலையை நினையவ லவரே.-1.124.4

1341

புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை
இகழ்வுசெய் தவனுடை யெழின்மறை வழிவளர்
முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு
நிகழ்தரு மிழலையை நினையவ லவரே.-1.124.5

1342

அன்றினர் அரியென வருபவர் அரிதினில்
ஒன்றிய திரிபுரம் ஒருநொடி யினிலெரி
சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற
நின்றவன் மிழலையை நினையவ லவரே.-1.124.6

1343

கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர்
சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர்
வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி
நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.-1.124.7

1344

ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
அரக்கன்நன் மணிமுடி யொருபதும் இருபது
கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு
நெருக்கினன் மிழலையை நினையவ லவரே.-1.124.8

1345

அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமலர் அயனரி கருதரு வகைதழல்
வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு
நெடியவன் மிழலையை நினையவ லவரே.-1.124.9

1346

மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களும் மதியிலர்
துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ்
நின்மலன் மிழலையை நினையவ லவரே.-1.124.10

1347

நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி
பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு
கற்றுவல் லவருல கினிலடி யவரே.-1.124.11

திருச்சிற்றம்பலம்