சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.135 திருப்பராய்த்துறை

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – பராய்த்துறைநாதவீசுவரர், தேவியார் – பொன்மயிலாம்பிகையம்மை.

பண் – மேகராகக்குறிஞ்சி

1448

நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை அண்ணலே.-1.135.1

1449

கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல அடிகளே.-1.135.2

1450

வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற ஒருவனார்
பாதிபெண்ணுரு ஆவர்பராய்த்துறை
ஆதியாய அடிகளே.-1.135.3

1451

தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர்
பாலும்நெய்பயின் றாடுபராய்த்துறை
ஆலநீழல் அடிகளே.-1.135.4

1452

விரவிநீறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவில்நின்றெரி யாடுவர்
பரவினாரவர் வேதம்பராய்த்துறை
அரவமார்த்த அடிகளே.-1.135.5

1453

மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர்
பறையுஞ்சங்கும் ஒலிசெய்பராய்த்துறை
அறையநின்ற அடிகளே.-1.135.6

1454

விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர்
படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை
அடையநின்ற அடிகளே.-1.135.7

1455

தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால்
பருக்கினாரவர் போலும்பராய்த்துறை
அருக்கன்றன்னை அடிகளே.-1.135.8

1456

நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும் மறியாதவர்
பாற்றினார்வினை யானபராய்த்துறை
ஆற்றல்மிக்க அடிகளே.-1.135.9

1457

திருவிலிச்சில தேரமண்ஆதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும்
பருவிலாலெயில் எய்துபராய்த்துறை
மருவினான்றனை வாழ்த்துமே.-1.135.10

1458

செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற் சிதையாதன
செல்வன்ஞான சம்பந்தனசெந்தமிழ்
செல்வமாமிவை செப்பவே.-1.135.11

திருச்சிற்றம்பலம்