சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.34 சீகாழி

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
வீழிமிழலையில் சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை

பண் – தக்கராகம்

360

அடலே றமருங் கொடியண்ணல்
மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வா ரவர்தூ நெறியாரே.          1.34.1

361

திரையார் புனல்சூ டியசெல்வன்
வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி
நிரையார் மலர்தூ வுமினின்றே.          1.34.2

362

இடியார் குரலே றுடையெந்தை
துடியா ரிடையா ளொடுதுன்னுங்
கடியார் பொழில்சூழ் தருகாழி
அடியார் அறியார் அவலம்மே.          1.34.3

363

ஒளியார் விடமுண் டவொருவன்
அளியார் குழல்மங் கையொடன்பாய்
களியார் பொழில்சூழ் தருகாழி
எளிதாம் அதுகண் டவரின்பே.                                        1.34.4

364

பனியார் மலரார் தருபாதன்
முனிதா னுமையோ டுமுயங்கி
கனியார் பொழில்சூழ் தருகாழி
இனிதாம் அதுகண் டவரீடே.          1.34.5

365

கொலையார் தருகூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான்
கலையார் தொழுதேத் தியகாழி
தலையால் தொழுவார் தலையாரே.          1.34.6

366

திருவார் சிலையால் எயிலெய்து
உருவார் உமையோ டுடனானான்
கருவார் பொழில்சூழ் தருகாழி
மருவா தவர்வான் மருவாரே.          1.34.7

367

அரக்கன் வலியொல் கஅடர்த்து
வரைக்கு மகளோ டுமகிழ்ந்தான்
சுரக்கும் புனல்சூழ் தருகாழி
நிரக்கும் மலர்தூ வுநினைந்தே.          1.34.8

368

இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங்
கருநற் பரவை கமழ்காழி
மருவப் பிரியும் வினைமாய்ந்தே.          1.34.9

369

சமண்சாக் கியர்தாம் அலர்தூற்ற
அமைந்தான் உமையோ டுடனன்பாய்க்
கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி
சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.          1.34.10

370 நலமா கியஞான சம்பந்தன்
கலமார் கடல்சூழ் தருகாழி
நிலையா கநினைந் தவர்பாடல்
வலரா னவர்வான் அடைவாரே.    1.34.11

திருச்சிற்றம்பலம்