சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.45 திருப்பழையனூர் – திருஆலங்காடு

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – ஊர்த்ததாண்டவேசுரர், தேவியார் – வண்டார்குழலியம்மை.

பண் – தக்கராகம்

481

துஞ்ச வருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள்கொள்ளும் வகைகேட்
டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.          1.45.1

482

கேடும் பிறவியும் ஆக்கினாருங் கேடிலா
வீடு மாநெறி விளம்பினாரெம் விகிர்தனார்
காடுஞ் சுடலையும் கைக்கொண்டெல்லிக் கணப்பேயோ
டாடும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.          1.45.2

483      

கந்தங் கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி
வெந்த பொடிநீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார்
கொந்தண் பொழிற்சோலை யரவின்தோன்றிக் கோடல்பூத்
தந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.          1.45.3

484

பால மதிசென்னி படரச்சூடி பழியோராக்
கால னுயிர்செற்ற காலனாய கருத்தனார்
கோலம் பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை
ஆலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.          1.45.4

485

ஈர்க்கும் புனல்சூடி இளவெண்டிங்கள் முதிரவே
பார்க்கு மரவம்பூண் டாடிவேடம் பயின்றாருங்
கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்
தார்க்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.          1.45.5

486

பறையுஞ் சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே
மறையும் பலபாடி மயானத்துறையும் மைந்தனார்
பிறையும் பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண்
டறையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.          1.45.6

487

நுணங்கு மறைபாடி யாடிவேடம் பயின்றாரும்
இணங்கு மலைமகளோ டிருகூறொன்றாய் இசைந்தாரும்
வணங்குஞ் சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட்
டணங்கும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.          1.45.7

488

கணையும் வரிசிலையும் எரியுங்கூடிக் கவர்ந்துண்ண
இணையில் எயின்மூன்றும் எரித்திட்டாரெம் இறைவனார்
பிணையுஞ் சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந்
தணையும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.          1.45.8

489
கவிழ மலைதரளக் கடகக்கையால் எடுத்தான்றோள்
பவழ நுனைவிரலாற் பையவூன்றிப் பரிந்தாரும்
தவழுங் கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத்
தவிழும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.          1.45.9

490

பகலும் இரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா
திகலும் இருவர்க்கும் எரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்
புகலும் வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய்
அகலும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.          1.45.10

491

போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே.          1.45.11

492 சாந்தங் கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன்
ஆந்தண் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளை
வேந்த னருளாலே விரித்தபாடல் இவைவல்லார்
சேர்ந்த விடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே.   1.45.12

திருச்சிற்றம்பலம்