சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.47 திருச்சிரபுரம்

சிரபுரமென்பதும் சீகாழிக்கொருபெயர். வீழிமிழலையில் சுவாமிபெயர் – வீழியழகர், தேவியார் – சுந்தரகுசாம்பிகை

பண் – பழந்தக்கராகம்

504

பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே
சொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்
செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே.          1.47.1

505

கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்
அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்
சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்
செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே.          1.47.2

506

நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே
காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்
சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே.                                        1.47.3

507

கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னே
கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்
செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே.          1.47.4

508

புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானை தன்னைக்
கரமெடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னே
மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்
சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே.          1.47.5

509

கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே
எண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்
திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே.          1.47.6

510

குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்
பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே
இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து
சிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே.                                        1.47.7

511

மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச ஒருவிரலால்
நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்
துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்
சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே.          1.47.8

512

மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே
நாலுவேதம் ஓதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச்
சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே.          1.47.9

513

புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்
பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்
மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே
சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே.          1.47.10

514 தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனை
அங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை
பங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்
சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே. 1.47.11

திருச்சிற்றம்பலம்