சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.59 திருத்தூங்கானைமாடம்

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சுடர்க்கொழுந்தீசர், தேவியார் – கடந்தைநாயகியம்மை.

பண் – பழந்தக்கராகம்

634

ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கு மிடங்கருதி நின்றீரெல்லாம் அடிக ளடிநிழற்கீ ழாளாம்வண்ணங்
கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங் கெழுமனைகள் தோறும்ம றையின்னொலி
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.                   1.59.1

635

பிணிநீர சாதல் பிறத்தலிவை பிரியப் பிரியாத பேரின்பத்தோ
டணிநீர மேலுலகம் எய்தலுறில் அறிமின் குறைவில்லை ஆனேறுடை
மணிநீல கண்ட முடையபிரான் மலைமகளுந் தானும் மகிழ்ந்துவாழுந்
துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.2

636

சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
ஆமா றறியா தலமந்துநீர் அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப்
பூமாண் அலங்கல் இலங்குகொன்றை புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.    1.59.3

637

ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை உடைத்தாய வாழ்க்கை யொழியத்தவம்
மான்று மனங்கருதி நின்றீரெல்லாம் மனந்திரிந்து மண்ணில் மயங்காதுநீர்
மூன்று மதிலெய்த மூவாச்சிலை முதல்வர்க் கிடம்போலும் முகில்தோய்கொடி
தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.                   1.59.4

638

மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை மரணத்தொ டொத்தழியு மாறாதலால்
வியல்தீர மேலுக மெய்தலுறின் மிக்கொன்றும் வேண்டா விமலனிடம்
உயர்தீர வோங்கிய நாமங்களா லோவாது நாளும் அடிபரவல்செய்
துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.     1.59.5

639

பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா படர்நோக் கின்கண் பவளந்நிற
நன்னீர்மை குன்றித் திரைதோலொடு நரைதோன்றுங் காலம் நமக்காதல்முன்
பொன்னீர்மை துன்றப் புறந்தோன்றுநற் புனல்பொதிந்த புன்சடையி னானுறையுந்
தொன்னீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.                   1.59.6

640

இறையூண் துகளோ டிடுக்கணெய்தி யிழிப்பாய வாழ்க்கை யொழியத்தவம்
நிறையூண் நெறிகருதி நின்றீரெல்லாம் நீள்கழ லேநாளும் நினைமின்சென்னிப்
பிறைசூ ழலங்கல் இலங்குகொன்றைப் பிணையும் பெருமான் பிரியாதநீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.7

641

பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
இல்சூ ழிடங்கருதி நின்றீரெல்லாம் இறையே பிரியா தெழுந்துபோதுங்
கல்சூ ழரக்கன் கதறச்செய்தான் காதலியுந் தானுங் கருதிவாழுந்
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.                   1.59.8

642

நோயும் பிணியும் அருந்துயரமும் நுகருடைய வாழ்க்கை யொழியத்தவம்
வாயும் மனங்கருதி நின்றீரெல்லாம் மலர்மிசைய நான்முகனும் மண்ணும்விண்ணும்
தாய அடியளந்தான் காணமாட்டாத் தலைவர்க் கிடம்போலுந் தண்சோலைவிண்
டோ யும் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே. 1.59.9

643

பகடூர் பசிநலிய நோய்வருதலாற் பழிப்பாய வாழ்க்கை ஒழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரும் மூடுதுவ ராடையாரும் நாடிச்சொன்ன
திகழ்தீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்திழை யுந்தானும் பொருந்திவாழுந்
துகள்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை மாடந் தொழுமின்களே.    1.59.10

644

மண்ணார் முழவதிரும் மாடவீதி வயல்காழி ஞானசம் பந்தன்நல்ல
பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சுந் தூங்கானை மாடமேயான்
கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய்
விண்ணோ ருலகத்து மேவிவாழும் விதியது வேயாகும் வினைமாயுமே.         1.59.11

திருச்சிற்றம்பலம்