சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.62 திருக்கோளிலி

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கோளிலியப்பர், தேவியார் – வண்டமர்பூங்குழலம்மை.

பண் – பழந்தக்கராகம்

667

நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே அரன்நாமங்
கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.          1.62.1

668

ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த
தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே
பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில்
கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே.                                       1.62.2

669

நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண்
டொன்றிவழி பாடுசெய லுற்றவன்றன் ஓங்குயிர்மேல்
கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான்
கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே.          1.62.3

670

வந்தமண லாலிலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டுஞ்
சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே.          1.62.4

671

வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால்
நஞ்சமுது செய்தருளும் நம்பியென வேநினையும்
பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்துகந்தான்
கொஞ்சுகிளி மஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே.          1.62.5

672

தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை
ஆவிதனி லஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும்
நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன்
கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே.          1.62.6

673

கன்னவிலும் மால்வரையான் கார்திகழும் மாமிடற்றான்
சொன்னவிலும் மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான்
மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியான் அங்கையினிற்
கொன்னவிலும் சூலத்தான் கோளிலியெம் பெருமானே.          1.62.7

674

அந்தரத்தில் தேரூரும் அரக்கன்மலை அன்றெடுப்பச்
சுந்தரத்தன் திருவிரலால் ஊன்றஅவன் உடல்நெரிந்து
மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானுங்
கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.          1.62.8

675

நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
தாணுவெனை ஆளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்
கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே.          1.62.9

676

தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள்
நடுக்கமிலா அமருலகம் நண்ணலுமாம் அண்ணல்கழல்
கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே.          1.62.10

677 நம்பனைநல் லடியார்கள் நாமுடைமா டென்றிருக்குங்
கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை
வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண்
டின்பமர வல்லார்க ளெய்துவர்கள் ஈசனையே. 1.62.11

திருச்சிற்றம்பலம்