சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.63 திருப்பிரமபுரம் – பல்பெயர்ப்பத்து

திருப்பிரமபுரம் என்பது சீர்காழி. இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் – பிரமபுரீசர்; தேவியார் – திருநிலைநாயகி.

பண் – தக்கேசி

678

எரியார்மழுவொன் றேந்தியங்கை இடுதலையேகலனா
வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே
சரியாநாவின் வேதகீதன் தாமரைநான்முகத்தன்
பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே.          1.63.1

679

பெயலார்சடைக்கோர் திங்கள்சூடிப் பெய்பலிக்கென்றயலே
கயலார்தடங்கண் அஞ்சொல்நல்லார் கண்டுயில்வவ்வுதியே
இயலால்நடாவி இன்பமெய்தி இந்திரனாள்மண்மேல்
வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே.          1.63.2

680

நகலார்தலையும் வெண்பிறையும் நளிர்சடைமாட்டயலே
பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே
அகலாதுறையும் மாநிலத்தில் அயலின்மையாலமரர்
புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே.          1.63.3

681

சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலோர்தாழ்குழையன்
அங்கோல்வளையார் ஐயம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
செங்கோல்நடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய
வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே.          1.63.4

682

தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன்
பிணிநீர்மடவார் ஐயம்வவ்வாய் பெய்கலைவவ்வுதியே
அணிநீருலக மாகியெங்கும் ஆழ்கடலாலழுங்கத்
துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே.          1.63.5

683

கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
அவர்பூணரையர்க் காதியாயவள்தன் மன்னனாள்மண்மேற்
தவர்பூம்பதிகள் எங்குமெங்குந் தங்குதராயவனே.          1.63.6

684

முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டயலே
நிலையாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே
தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச்
சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே.          1.63.7

685

எருதேகொணர்கென் றேறியங்கை இடுதலையேகலனாக்
கருதேர்மடவார் ஐயம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே
ஒருதேர்கடாவி ஆரமரு ளொருபதுதோள்தொலையப்
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர்புண்ணியனே.          1.63.8

686

துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமணுங்
கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார்
அவர்பூம்பலியோ டையம்வவ்வா யால்நலம்வவ்வுதியே
தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே.          1.63.9

687

நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல
குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே
அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய
கழல்நாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே.          1.63.10

688

கட்டார்துழாயன் தாமரையான் என்றிவர்காண்பரிய
சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே
நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த
கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே.          1.63.11

689

கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமலவூர்க்கவுணி
நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல
படையார்மழுவன் றன்மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க்
கடையாவினைகள் உலகில்நாளும் அமருலகாள்பவரே.          1.63.12

திருச்சிற்றம்பலம்