சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.68 திருக்கயிலாயம்

சுவாமிபெயர் – கயிலாயநாதர், தேவியார் – பார்வதியம்மை.

பண் – தக்கேசி

733  

பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில்
கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர்
இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலைமலையாரே.                                               1.68.1

734  

புரிகொள்சடையார் அடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர்பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கவிருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே.                                               1.68.2

735  

மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல்
மேவுமதியும் நதியும்வைத்த விளைவர்கழலுன்னுந்
தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல்முகவன்சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலைமலையாரே.                                               1.68.3

736  

முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன்
தென்னீருருவம் அழியத்திருக்கண் சிவந்தநுதலினார்
மன்னீணர்மடுவும் படுகல்லறையின் உழுவைசினங்கொண்டு
கன்னீணர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலைமலையாரே.                                               1.68.4

737  

ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல்சேர்வார்
நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித்திரண்டெங்குந்
தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல்நெறியோடிக்
கன்றும்பிடியும் அடிவாரஞ்சேர் கயிலைமலையாரே.                                               1.68.5

738  

தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப்
போதார்பாக மாகவைத்த புனிதர்பனிமல்கும்
மூதாருலகில் முனிவருடனாய் அறநான்கருள்செய்த
காதார்குழையர் வேதத்திரளர் கயிலைமலையாரே.                                               1.68.6

(*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.                                                        1.68.7

734

தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியால்
எடுத்தான்றிரள்தோள் முடிகள்பத்தும் இடியவிரல்வைத்தார்
கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங்கூற்றைக்
கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலைமலையாரே.                                               1.68.8

740  

ஊணாப்பலிகொண் டுலகிலேற்றார் இலகுமணிநாகம்
பூணாணார மாகப்பூண்டார் புகழுமிருவர்தாம்
பேணாவோடி நேடவெங்கும் பிறங்குமெரியாகிக்
காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலைமலையாரே.                                               1.68.9

741  

விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர்
பொருதுபகரும் மொழியைக்கொள்ளார் புகழ்வார்க்கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண்டிகழ்வார்கள்
கருதும்வண்ணம் உடையார்போலுங் கயிலைமலையாரே.                                              1.68.10

742  

போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன்
காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல்
தேராவுரைத்த செஞ்சொல்மாலை செப்புமடியார்மேல்
வாராபிணிகள் வானோருலகில் மருவும்மனத்தாரே.                                               1.68.11

திருச்சிற்றம்பலம்