சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.76 திருஇலம்பையங்கோட்டூர்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – சந்திரசேகரர், தேவியார் – கோடேந்துமுலையம்மை.

பண் – குறிஞ்சி

820

மலையினார் பருப்பதந் துருத்தி மாற்பேறுமாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
நிலையினான் எனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக் கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.-1.76.1

821

திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை
நிருமல னெனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.-1.76.2

822

பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம் பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளுங்
காலனாம் எனதுரை தனதுரை யாகக் கனலெரி யங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோ ங்கும்
ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள் வதியல்பே.-1.76.3

823

உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன் ஒற்றியூ ருறையுமண் ணாமலை யண்ணல்
விளம்புவா னெனதுரை தனதுரை யாக வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக் கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.-1.76.4

824

தேனுமா யமுதமாய்த் தெய்வமுந் தானாய்த் தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
வானுமா மெனதுரை தனதுரை யாக வரியரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிர லூகங் கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
ஏனமா னுழிதரும் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.-1.76.5

825

மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்
தனமிலா னெனதுரை தனதுரை யாகத் தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்
புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம் பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்
இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.-1.76.6

826

நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான் நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரை யாக ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல றாத பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.-1.76.7

827

வேருலா மாழ்கடல் வருதிரை யிலங்கை வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
ஆருலா மெனதுரை தனதுரை யாக ஆகமோ ரரவணிந் துழிதரு மண்ணல்
வாருலா நல்லன மாக்களுஞ் சார வாரண முழிதரும் மல்லலங் கானல்
ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.-1.76.8

828

கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன் கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா
உளமழை யெனதுரை தனதுரை யாக வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
வளமழை யெனக்கழை வளர்துளி சோர மாசுண முழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.-1.76.9

829

உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்
பெருஞ்செல்வ னெனதுரை தனதுரை யாகப் பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞ்சுனை முல்லைநன் பொன்னடை வேங்கைக் களிமுக வண்டொடு தேனின முரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.-1.76.10

830

கந்தனை மலிகனை கடலொலி யோதங் கானலங் கழிவளர் கழுமல மென்னும்
நந்தியா ருறைபதி நால்மறை நாவன் நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர் இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும் வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.-1.76.11

திருச்சிற்றம்பலம்