சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.94 திருஆலவாய் – திருவிருக்குக்குறள்

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் – சொக்கநாதசுவாமி, தேவியார் – மீனாட்சியம்மை.

பண் – குறிஞ்சி

1014

நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞாலம் ஆள்வரே.-1.94.1

1015

ஞால மேழுமாம், ஆல வாயிலார்
சீல மேசொலீர், காலன் வீடவே.-1.94.2

1015

ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே.-1.94.3

1017
-அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே.-1.94.4

1018
ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே.-1.94.5

1019

அண்ணல் ஆலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ணம் இன்பமே.-1.94.6

1020

அம்பொன் ஆலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே.-1.94.7

1021

அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்கம் உண்மையே.-1.94.8

1022

அருவன் ஆலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே.-1.94.9

1023

ஆரம் நாகமாம், சீரன் ஆலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே.-1.94.10

1024

அடிகள் ஆலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்றமிழ்ச், செடிகள் நீக்குமே.-1.94.11

திருச்சிற்றம்பலம்