சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய முதல் திருமுறை

136 பதிகங்கள் – 1469 பாடல்கள் – 88 கோவில்கள்


 

1.97 திருப்புறவம்

பண் – குறிஞ்சி

1047

எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த
மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச்
செய்யான்வெண்ணீ றணிவான்றிகழ்பொற் பதிபோலும்
பொய்யாநாவின் அந்தணர்வாழும் புறவம்மே.-1.97.1

1048

மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற
நாதனென்றேத்தும் நம்பரன்வைகுந் நகர்போலும்
மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப்
போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.-1.97.2

1049

வற்றாநதியும் மதியும்பொதியும் சடைமேலே
புற்றாடரவின் படமாடவுமிப் புவனிக்கோர்
பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே.-1.97.3

1050

துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து
மின்னார்சடைமேல் அரவும்மதியும் விளையாடப்
பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொன்னார்புரிநூல் அந்தணர்வாழும் புறவம்மே.-1.97.4

1051

தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங்
காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு
பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும்
பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே.-1.97.5

1052

கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்
அற்றரனேநின் னடிசரணென்னும் அடியோர்க்குப்
பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர்
பொற்றிகழ்மாடத் தொளிகள்நிலாவும் புறவம்மே.-1.97.6

1053

எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக்
கொண்டெழுகோல முகில்போற் பெரியகரிதன்னைப்
பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர்
புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே.-1.97.7

1054

பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத்
துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழில்மேவும்
அரக்கன்திண்டோ ள் அழிவித்தானக் காலத்திற்
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.-1.97.8

1055

மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும்
மூர்த்தியைநாடிக் காணவொணாது முயல்விட்டாங்
கேத்தவெளிப்பா டெய்தியவன்றன் னிடமென்பர்
பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே.-1.97.9

1056

வையகம்நீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான்
மெய்யலதேரர் உண்டிலையென்றே நின்றேதம்
கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர்
பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.-1.97.10

1057

பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து
மன்னியஈசன் சேவடிநாளும் பணிகின்ற
தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன்
இன்னிசைஈரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே.-1.97.11

திருச்சிற்றம்பலம்