கண்ணப்ப நாயனார்

பொத்தப்பி நாட்டு உடுப்பபூரில் நாகன் என்னும் வேடர் தலைவனுக்கும் அவன் மனைவி தத்தை என்பவளுக்கும் மகனாகத் தோன்றியவர் திண்ணனார். விற்பயிற்சி பெற்ற இவர், பதினாறாண்டு நிரம்பிய பின் தந்தையின் சொல்படி வேடர்குலக் காவல் பூண்டார். வேடர்கள் சூழ வேட்டைக்குச் சென்று காட்டிலுள்ள கொடிய விலங்குகளைக் கொன்றார். காட்டில் விரித்த வலையினை அறுத்துக் கொண்டு ஒடிய வலிய பன்றியினைத் துரத்திச் சென்று குற்றுடை வாளால் இருதுண்டம்படக் கொன்று வீழ்த்தினார்.

     நீர் வேட்கையினால் நாணனும் காடனும் தொடர்ந்துவரப் பொன்முகலியாற்றில் தண்ணீர் பருகி எதிரே தோன்றும் காளத்திமலையினைத் கண்டார். அம்மலை மேல் குடுமித்தேவர் இருப்பர். கும்பிடலாம் என்றான் நாணன். அவனுடன் மலைமீதேறிக் குடுமித் தேவராகிய சிவலிங்கப் பெருமானைக் கண்டு ஆரா அன்புடன் ஓடிச் சென்று தழுவிக்கொண்டார். இறைவரது அருள் நோக்கால் திண்ணனார் அன்பே வடிவமாய் இறைவரைப் பிரிய மனமில்லாதவராய் அவர்க்கு இறைச்சி கொண்டுவர எண்ணி மலையில் இருந்து கீழ் இறங்கினார்.

     காடன் கொத்தி வைத்திருந்த பன்றி இறைச்சியைத் தீயிட்டுக் காய்ச்சிப் பல்லில் அதுக்கிச் சுவையும் பதமும் அறிந்து அதனைத் தொன்னையில் நிரப்பி ஒரு கையில் எடுத்துக்கொண்டார். வில்லை மற்றொரு கையில் ஏந்தி இறைவனுக்கு சாத்தும் பூவினைத் தம் தலையிலும், திருமஞ்சன நீரினைத் தமது வாயிலும் கொண்டு மலையின் மீது ஏறிச் சென்று காளத்திநாதர் முடிமீது அணியப் பெற்றிருந்த பச்சிலைகளைச் செருப்பணிந்த கால்களால் விருப்புறத் தள்ளித் தமது வாயிற் கொண்டு வந்த நீரை இறைவனுக்குத் திருமஞ்சனமாக ஆட்டித் தம் தலையிற்கொண்ட மலர்களை இறைவர்க்குச் சாத்திப் பன்றியிறைச்சியினைத் திருவமுதாகப் படைத்து மகிழ்ந்தார்.

     பெற்றோர் அழைத்தும் செல்லாது காளத்தி இறைவரின் மீது பேரன்புடையவராய் திண்ணனார் காலையில் சென்று வேட்டையாடிக் கொணர்ந்த இறைச்சியை இறைவார்க்குப் படைத்தலையும் இரவெல்லாம் இறைவரைக் காத்து நிற்றலையும் தமது கடமையாகக் கொண்டார். ஆகம நெறியில் இறைவரை நாள்தோறும் பூசை செய்யும் சிவகோசரியார் இறைவனருகே பன்றியின் இறைச்சியும், நாயடியும் எங்கும் பரவி இருப்பதைக் கண்டு வருந்தித் தூய்மை செய்து தம் பூசையை நிறைவேற்றி வந்தார். நாட்கள் ஐந்தாயின. ஆறாம் நாளில் திண்ணனாரது பேரன்பின் திறத்தைச் சிவகோசரியார்க்கு அறிவுறுத்தத் திருஉள்ளம் கொண்ட காளத்தியிறைவர் தமது வலக்கண்ணில் உதிரம் பெருகி ஒழுகும்படி செய்தார். நண்பகலில் பூசைக்கு வந்த திண்ணனார் அதனைக் கண்டு வருந்திப் பச்சிலைகளாகிய நன்மருந்தினைத் தேடித் கொணர்ந்து பிழிந்தும் உதிரம் நிற்கவில்லை. அந்நிலையில் “உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு ஊன்” என்னும் பழமொழி நினைவுக்கு வந்தமையால் தமது வலக்கண்ணை அம்பினால் தோண்டி எடுத்துக் காளத்தியப்பரது வலக் கண்ணில் அப்பினார். குருதி ஒழுகுதல் நின்றது. எனினும் இறைவரது இடக்கண்ணில் குருதி ஒழுகத் தொடங்கியது. மருந்து கைகண்ட திண்ணனார் தமது இடக் கண்ணையும் தோண்ட முற்பட்டார். அந்நிலையில் காளத்தி இறைவர் “நில்லு கண்ணப்பா” என மும்முறை கூறித் தம் திருக்கையினால் திண்ணனார் கையைப் பிடித்துக் கொண்டு, “மாறிலாப் பேரன்பனே, என் வலப்பக்கத்தில் நிற்பாயாக” எனத் திருவாய் மலர்ந்து கண்ணப்ப நாயனார்க்குப் பேரருள் புரிந்து பேரானந்தப் பெருவாழ்வை நல்கி அருளினார்.

திருச்சிற்றம்பலம்