சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருமூலர் பெருமான் அருளிய பத்தாம் திருமுறை

திருமந்திரம்

1237 பதிகங்கள் – 3000 பாடல்கள் 


10.2 இரண்டாம் தந்திரம் 10.. .(1).காத்தல்


10.2 இரண்டாம் தந்திரம் 10.. .(1).காத்தல்
.(1). திதி
.411..
புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப்
புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப்
புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப்
புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே
.412..
தானே திசையொடு தேவரு மாய்நிற்குந்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந்
தானே உலகில் தலைவனு மாமே
.413..
உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய் கார்முகில் நீர்ப்பொழி வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் .(1).பெருவழி அண்ணல் நின்றானே
.(1). பெருவெளி
.414..
தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
.(1).கூடு மரபிற் குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே
.(1). கூடும்பிறவிக்
.415..
தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்குந்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்குந்
தானொரு காலந் தண்மழை யாய்நிற்குந்
தானொரு காலந்தண் மாயனு மாமே
.416..
அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்துநின் றானே
.417..
உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலுங் குடமுஞ் சிறுதூதை
மற்றும் அவனே வனையவல் லானே
.418..
உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் நிலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராவண்ணந் தாங்கிநின் றானே
.419..
தாங்கருந் தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணி தானே
.420..
அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணுகினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே

திருச்சிற்றம்பலம்