திருக்குறிப்புத்தொண்ட நாயனார்

தொண்டை நாட்டில் காஞ்சி மாநகரத்தில் வண்ணார் குலத்தில் தோன்றியவர். திருக்குறிப்புத் தொண்டர். இவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து திருத்தொண்டு செய்யும் இயல்பினர் அதனால் திருக்குறிப்புத்தொண்டர் எனப் போற்றப் பெற்றார்.

சிவனடியார்களின் ஆடையில் உள்ள அழுக்கினை அகற்றி தூய்மை செய்து கொடுத்தலை தமது பணியாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் சிவபெருமான் அடியார் திருவுருக்கொண்டு அழுக்கடைந்த கந்தையுடன் திருக்குறிப்புத் தொண்டரை அடைந்தார்.

“யான் உடுத்தி உள்ள இக்கந்தை அழக்கேறி உடுத்துதற்குத் தகுதியில்லாத நிலையில் இருந்தாலும் உடம்பினை வருத்தும் குளிருக்குப் பயந்து இதனை விட முடியாத நிலையில் உள்ளேன். இதனைத் துவைத்து உலர்த்தி மாலைப் பொழுது ஆவதற்கு முன் தருவீராயின் எடுத்துச் செல்லும்” என்றார்.

அவ்வாறே தருவதாகத் திருக்குறிப்புத் தொண்டர் அக்கந்தையாடையை வாங்கிச் சென்றார். எதிர்பாராத நிலையில் மழை தொடங்கி விடாது பெய்தது. கந்தை உலராத நிலையில் அடியார் உடம்புக்கு ஊறு நேருமே என்று திருப்குறிப்புத் தொண்டர் கலக்கமுற்றார்.

மாலைப்பொழுது வரவரச் செய்வதறியாது துணி துவைக்கும் கற்பாறையில் தலையை மோதினார். அந்நிலையில் திருவேகம் தம் திருக்கையால் தடுத்துப் பிடித்தருளி உமையொருபாகராய்ச் காட்சி நல்கிச் சிவபதத்தை அளித்தருளினார்.

திருச்சிற்றம்பலம்