சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.2 திருவலஞ்சுழி

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – காப்பகத்தீசுவரர், தேவியார் – மங்களநாயகியம்மை.

பண்இந்தளம்

11

விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.-2.2.1

12

பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே.-2.2.2

13

கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.-2.2.3

14

கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே.-2.2.4

15

கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.-2.2.5

16

பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே.-2.2.6

17

கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.-2.2.7

18

தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழிக்
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே.-2.2.8

19

தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.-2.2.9

20

உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழிப்
பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.-2.2.10

21

வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே.-2.2.11

திருச்சிற்றம்பலம்