சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.4 திருவான்மியூர்

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – மருந்தீசுவரர், தேவியார் – சுந்தரமாது அல்லது சொக்கநாயகி.

பண்இந்தளம்

33

கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்
திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்
உரையெ லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்
வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.-2.4.1

34

சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதஞ்
சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்
சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்
அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே.-2.4.2

35

கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறந்
தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்
தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்
ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.-2.4.3

36

மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச்
செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்
துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்
வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.-2.4.4

37

மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.-2.4.5

38

போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந்
தீதி லந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச்
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.-2.4.6

39

வண்டி ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த்
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.-2.4.7

40

தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.-2.4.8

41

பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்
சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன் றுகந் தில்பலி யேற்றதே.-2.4.9

42

மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினஞ்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.-2.4.10

43

மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்
நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே.-2.4.11

திருச்சிற்றம்பலம்