சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.040 திருப்பிரமபுரம்

பண் – சீகாமரம்
426

எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.

427

தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.

428

நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும்
பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.

429

சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்
தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை
நாநாளும் நன்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே.

430

கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே.

431

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே.

432

சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த
இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.

433

எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே.

434

கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே.

435

உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.

436

தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே

திருச்சிற்றம்பலம்