சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.071 திருக்குறும்பலா


இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே திருக்குற்றாலம்.
சுவாமிபெயர் – குறும்பலாநாதர் – தேவியார் – குழன்மொழியம்மை.


பண் – காந்தாரம்
765

திருந்த மதிசூடித் தெண்ணீர் சடைக்கரந்து தேவி பாகம்
பொருந்திப் பொருந்தாத வேடத்தாற் காடுறைதல் புரிந்த செல்வர்
இருந்த இடம்வினவில் ஏலங்கமழ் சோலையின் வண்டு யாழ்செய்
குருந்த மணம்நாறுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.  01

766

நாட்பலவுஞ் சேர்மதியஞ் சூடிப் பொடியணிந்த நம்பான் நம்மை
ஆட்பலவுந் தானுடைய அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
கீட்பலவுங் கீண்டு கிளைகிளையன் மந்திபாய்ந் துண்டு விண்ட
கோட்பலவின் தீங்கனியை மாக்கடுவ னுண்டுகளுங் குறும்ப லாவே.  02

767

வாடல் தலைமாலை சூடிப் புலித்தோல் வலித்து வீக்கி
ஆட லரவசைத்த அம்மா னிடம்போலு மந்தண் சாரல்
பாடற் பெடைவண்டு போதலர்த்த தாதவிழ்ந்து பசும்பொ னுந்திக்
கோடன் மணங்கமழுங் குன்றிடஞ்சூழ் தண்சாரற் குறும்ப லாவே.  03

768

பால்வெண் மதிசூடிப் பாகத்தோர் பெண்கலந்து பாடி யாடிக்
கால னுடல்கிழியக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
நீல மலர்க்குவளை கண்திறக்க வண்டரற்றும் நெடுந்தண் சாரல்
கோல மடமஞ்ஞை பேடையோ டாட்டயருங் குறும்ப லாவே.  04

769

தலைவாண் மதியங் கதிர்விரியத் தண்புனலைத் தாங்கித் தேவி
முலைபாகங் காதலித்த மூர்த்தி யிடம்போலும் முதுவேய் சூழ்ந்த
மலைவாய் அசும்பு பசும்பொன் கொழித்திழியும் மல்கு சாரல்
குலைவாழைத் தீங்கனியும் மாங்கனியுந் தேன்பிலிற்றுங் குறும்ப லாவே.  05

770

நீற்றே துதைந்திலங்கு வெண்ணூலர் தண்மதியர் நெற்றிக் கண்ணர்
கூற்றேர் சிதையக் கடிந்தா ரிடம்போலுங் குளிர்சூழ் வெற்பில்
ஏற்றேனம் ஏன மிவையோ டவைவிரவி யிழிபூஞ் சாரல்
கோற்றேன் இசைமுரலக் கேளாக் குயில்பயிலுங் குறும்ப லாவே.  06

771

பொன்றொத்த கொன்றையும் பிள்ளை மதியும் புனலுஞ் சூடிப்
பின்றொத்த வார்சடையெம் பெம்மா னிடம்போலும் பிலயந் தாங்கி
மன்றத்து மண்முழவம் ஓங்கி மணிகொழித்து வயிரம் உந்திக்
குன்றத் தருவி யயலே புனல்ததும்புங் குறும்ப லாவே.  07

772

ஏந்து திணிதிண்டோ ள் இராவணனை மால்வரைக்கீழ் அடர வூன்றிச்
சாந்தமென நீறணிந்த சைவர் இடம்போலுஞ் சாரற் சாரல்
பூந்தண் நறுவேங்கைக் கொத்திறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியுங் களிறு முடன்வணங்குங் குறும்ப லாவே.  08

773

அரவின் அணையானும் நான்முகனுங் காண்பரிய அண்ணல் சென்னி
விரவி மதியணிந்த விகிர்தர்க் கிடம்போலும் விரிபூஞ் சாரல்
மரவம் இருகரையும் மல்லிகையுஞ் சண்பகமும் மலர்ந்து மாந்த
குரவம் முறுவல்செய்யுங் குன்றிடஞ்சூழ் தண்சாரல் குறும்ப லாவே.  09

774

மூடிய சீவரத்தர் முன்கூறுண் டேறுதலும் பின்கூ றுண்டு
காடி தொடுசமணைக் காய்ந்தா ரிடம்போலுங் கல்சூழ் வெற்பில்
நீடுயர் வேய்குனியப் பாய்கடுவன் நீள்கழைமேல் நிருத்தஞ் செய்யக்
கூடிய வேடுவர்கள் கூய்விளியாக் கைமறிக்குங் குறும்ப லாவே.  10

775

கொம்பார்பூஞ் சோலைக் குறும்பலா மேவிய கொல்லேற் றண்ணல்
நம்பான் அடிபரவும் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன
இன்பாய பாட லிவைபத்தும் வல்லார் விரும்பிக் கேட்பார்
தம்பால தீவினைகள் போயகலும் நல்வினைகள் தளரா வன்றே.  11

திருச்சிற்றம்பலம்