சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.083 திருக்கொச்சைவயம்


பண் – பியந்தைக்காந்தாரம்
898

நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த நெடுமா வுரித்த நிகரில்
சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை விழவோசை வேத வொலியின்
சாலநல் வேலையோசை தருமாட வீதி கொடியாடு கொச்சை வயமே.  01

899

விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள் தகவைத்த சோதிபதி தான்
மடையிடை யன்னமெங்கும் நிறையப் பரந்து கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும் வளர்கின்ற கொச்சை வயமே.  02

900

படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன் இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும் நளிர்சோலை கோலு கனகக்
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல மறையோது கொச்சை வயமே.  03

901

எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து முயல்வுற்ற சிந்தை முடுகி
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன வளர்கின்ற கொச்சை வயமே.  04

902

பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர னொடுதோழ மைக்கொள் பகவன்
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும் இறைவன் இடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம் வளர்தூம மோடி யணவிக்
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து நிறைகின்ற கொச்சை வயமே.  05

903

புலியதள் கோவணங்கள் உடையாடை யாக வுடையான் நினைக்கு மளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான்
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை யுடையார் நிறைந்து வளரப்
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு வரைமேவு கொச்சை வயமே.  06

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  07

904

மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன் முடியோடு தோள்கள் நெரியப்
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ டுடனாடி மேய பதிதான்
இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட விடுமூச லன்ன கமுகின்
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள் அடிதேடு கொச்சை வயமே.  08

905

வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம் முழுதுண்ட மாலும் இகலிக்
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும் அறியாத சோதி பதிதான்
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து விரைதேரப் போது மடுவிற்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து வயல்மேவு கொச்சை வயமே.  09

906

கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர் இடுசீவ ரத்தி னுடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல விகிர்தத் துருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறார மிக்க குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து மணநாறு கொச்சை வயமே.  10

907

இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை உலகங்க ளேழு முடனே
மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி இனிதா இருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த தமிழ்மாலை பாடு மவர்போய்
அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும் அழகா இருப்ப தறிவே.  11

திருச்சிற்றம்பலம்