சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.089 திருக்கொச்சைவயம்


பண் – பியந்தைக்காந்தாரம்
963

அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை தன்மேற்
பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார்
மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத
குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.  01

964

சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக்
கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில்
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும்
வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.  02

965

பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ
மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங்
கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே.  03

966

கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர்
பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர்
கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து
கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.  04

967

ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ
வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார்
ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே.  05

968

மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை தன்மேற்
துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக
விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேற்
கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே.  06

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  07

969

அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப்
பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை
வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய்
குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.  08

970

சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா லென்றிவ ரேத்த
ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர்ந் தாரும்
பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடுங்
கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே.  09

971

குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் கொள்கை யினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டர்
பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங்
கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.  10

972

கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய
அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன்
சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே.  11

திருச்சிற்றம்பலம்