சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.090 திருநெல்வாயில் திருஅரத்துறை


இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – அரத்துறைநாதர், தேவியார் – ஆனந்தநாயகியம்மை.


பண் – பியந்தைக்காந்தாரம்
973

எந்தை ஈசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால் சென்றுகை கூடுவ தன்றாற்
கந்த மாமல ருந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.  01

974

ஈர வார்சடை தன்மேல் இளம்பிறை யணிந்த எம்பெருமான்
சீருஞ் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்
வாரி மாமல ருந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆருஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.  02

975

பிணிக லந்தபுன் சடைமேற் பிறையணி சிவனெனப் பேணிப்
பணிக லந்துசெய் யாத பாவிகள் தொழச்செல் வதன்றால்
மணிக லந்துபொன் னுந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணிக லந்தநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.  03

976

துன்ன ஆடையொன் றுடுத்துத் தூயவெண் ணீற்றி னராகி
உன்னி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றாற்
பொன்னும் மாமணி யுந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
அன்ன மாருநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.  04

977

வெருகு ரிஞ்சுவெங் காட்டி லாடிய விமலனென் றுள்கி
உருகி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றால்
முருகு ரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்
தருகு ரிஞ்சுநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.  05

978

உரவு நீர்சடைக் கரந்த வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்
பரவி நைபவர்க் கல்லாற் பரிந்துகை கூடுவ தன்றால்
குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அரவ மாருநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.  06

979

நீல மாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணுஞ்
சீல மாந்தர்கட் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்
கோல மாமல ருந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
ஆலுஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.  07

980

செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான்
கொழுங் கனிசுமந் துந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்
அழுந்துஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.  08

981

நுணங்கு நூலயன் மாலும் இருவரும் நோக்கரி யானை
வணங்கி நைபவர்க் கல்லால் வந்துகை கூடுவ தன்றால்
மணங்க மழ்ந்துபொன் னுந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்
அணங்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.  09

982

சாக்கி யப்படு வாருஞ் சமண்படு வார்களும் மற்றும்
பாக்கி யப்பட கில்லாப் பாவிகள் தொழச்செல்வ தன்றால்
பூக்க மழ்ந்துபொன் னுந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்
ஆர்க்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.  10

983

கறையி னார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞான சம்பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை யடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும் ஐயுற வில்லை பாட்டிவை பத்தும் வல்லார்க்கே.  11

திருச்சிற்றம்பலம்