சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.103 திரு அம்பர்த்திருமாகாளம்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – காளகண்டேசுவரர்,
தேவியார் – பட்சநாயகியம்மை.


பண் – நட்டராகம்
1114

புல்கு பொன்னிறம் புரிசடை நெடுமுடிப் போழிள மதிசூடிப்
பில்கு தேனுடை நறுமலர்க் கொன்றையும் பிணையல்செய் தவர்மேய
மல்கு தண்டுறை அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
அல்லும் நண்பக லுந்தொழும் அடியவர்க் கருவினை அடையாவே.  01

1115  

அரவம் ஆட்டுவர் அந்துகில் புலியதள் அங்கையில் அனலேந்தி
இரவும் ஆடுவர் இவையிவர் சரிதைக ளிசைவன பலபூதம்
மரவந் தோய்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
பரவி யும்பணிந் தேத்தவல் லாரவர் பயன்தலைப் படுவாரே.  02

1116  

குணங்கள் கூறியுங் குற்றங்கள் பரவியுங் குரைகழ லடிசேரக்
கணங்கள் பாடவுங் கண்டவர் பரவவுங் கருத்தறிந் தவர்மேய
மணங்கொள் பூம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
வணங்கும் உள்ளமோ டணையவல் லார்களை வல்வினை அடையாவே.  03

1117  

எங்கு மேதுமோர் பிணியிலர் கேடிலர் இழைவளர் நறுங்கொன்றை
தங்கு தொங்கலுந் தாமமுங் கண்ணியுந் தாமகிழ்ந் தவர்மேய
மங்குல் தோய்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளங்
கங்கு லும்பக லுந்தொழும் அடியவர் காதன்மை யுடையாரே.  04

1118  

நெதியம் என்னுள போகமற் றென்னுள நிலமிசை நலமாய
கதியம் என்னுள வானவர் என்னுளர் கருதிய பொருள்கூடில்
மதியந் தோய்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
புதிய பூவொடு சாந்தமும் புகையுங்கொண் டேத்துதல் புரிந்தோர்க்கே.  05

1119  

கண்ணு லாவிய கதிரொளி முடிமிசைக் கனல்விடு சுடர்நாகந்
தெண்ணி லாவொடு திலதமு நகுதலை திகழவைத் தவர்மேய
மண்ணு லாம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
உண்ணி லாநினைப் புடையவ ரியாவரிவ் வுலகினில் உயர்வாரே.  06

1120

தூசு தானரைத் தோலுடைக் கண்ணியஞ் சுடர்விடு நறுங்கொன்றை
பூசு வெண்பொடிப் பூசுவ தன்றியும் புகழ்புரிந் தவர்மேய
மாசு லாம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
பேசு நீர்மையர் யாவரிவ் வுலகினிற் பெருமையைப் பெறுவாரே.  07

1121

பவ்வ மார்கடல் இலங்கையர் கோன்றனைப் பருவரைக் கீழூன்றி
எவ்வந் தீரவன் றிமையவர்க் கருள்செய்த இறையவன் உறைகோயில்
மவ்வந் தோய்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளங்
கவ்வை யாற்றொழும் அடியவர் மேல்வினை கனலிடைச் செதிளன்றே.  08

1122  

உய்யுங் காரணம் உண்டென்று கருதுமின் ஒளிகிளர் மலரோனும்
பைகொள் பாம்பணைப் பள்ளிகொள் அண்ணலும் பரவநின் றவர்மேய
மையு லாம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளங்
கையி னாற்றொழு தவலமும் பிணியுந்தங் கவலையுங் களைவாரே.  09

1123  

பிண்டி பாலரும் மண்டைகொள் தேரரும் பீலிகொண் டுழல்வாருங்
கண்ட நூலருங் கடுந்தொழி லாளருங் கழறநின் றவர்மேய
வண்டு லாம்பொழில் அரிசிலின் வடகரை வருபுனல் மாகாளம்
பண்டு நாஞ்செய்த பாவங்கள் பற்றறப் பரவுதல் செய்வோமே.  10

1124

மாறு தன்னொடு மண்மிசை யில்லது வருபுனல் மாகாளத்
தீறும் ஆதியு மாகிய சோதியை ஏறமர் பெருமானை
நாறு பூம்பொழில் காழியுள் ஞானசம் பந்தன தமிழ்மாலை
கூறு வாரையுங் கேட்கவல் லாரையுங் குற்றங்கள் குறுகாவே.  11

திருச்சிற்றம்பலம்