சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.109 திருக்கோட்டூர்


இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கொழுந்தீசுவரர், தேவியார் – தேன்மொழிப்பாவையம்மை.


பண் – நட்டராகம்

1179

நீல மார்தரு கண்டனே நெற்றியோர் கண்ணனே ஒற்றைவிடைச்
சூல மார்தரு கையனே துன்றுபைம் பொழில்கள்சூழ்ந் தழகாய
கோல மாமலர் மணங்கமழ் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
சால நீள்தல மதனிடைப் புகழ்மிகத் தாங்குவர் பாங்காலே.  01

1180

பங்க யம்மலர்ச் சீறடி பஞ்சுறு மெல்விர லரவல்குல்
மங்கை மார்பலர் மயில்குயில் கிளியென மிழற்றிய மொழியார்மென்
கொங்கை யார்குழாங் குணலைசெய் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
சங்கை யொன்றில ராகிச்சங் கரன்திரு அருள்பெறல் எளிதாமே.  02

1181

நம்ப னார்நல மலர்கொடு தொழுதெழும் அடியவர் தமக்கெல்லாஞ்
செம்பொ னார்தரும் எழில்திகழ் முலையவர் செல்வமல் கியநல்ல
கொம்ப னார்தொழு தாடிய கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
அம்பொ னார்தரு முலகினில் அமரரோ டமர்ந்தினி திருப்பாரே.  03

1182

பலவு நீள்பொழில் தீங்கனி தேன்பலா மாங்கனி பயில்வாய
கலவ மஞ்ஞைகள் நிலவுசொற் கிள்ளைகள் அன்னஞ்சேர்ந் தழகாய
குலவு நீள்வயல் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
நிலவு செல்வத்த ராகிநீள் நிலத்திடை நீடிய புகழாரே.  04

1183

உருகு வாருள்ளத் தொண்சுடர் தனக்கென்றும் அன்பராம் அடியார்கள்
பருகும் ஆரமு தெனநின்று பரிவொடு பத்திசெய் தெத்திசையுங்
குருகு வாழ்வயல் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
அருகு சேர்தரு வினைகளும் அகலும்போய் அவனருள் பெறலாமே.  05

1184

துன்று வார்சடைத் தூமதி மத்தமுந் துன்னெருக் கார்வன்னி
பொன்றி னார்தலைக் கலனொடு பரிகலம் புலியுரி யுடையாடை
கொன்றை பொன்னென மலர்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவாரை
என்று மேத்துவார்க் கிடரிலை கேடிலை ஏதம்வந் தடையாவே.  06

1185

மாட மாளிகை கோபுரங் கூடங்கள் மணியரங் கணிசாலை
பாடு சூழ்மதிற் பைம்பொன்செய் மண்டபம் பரிசொடு பயில்வாய
கூடு பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
கேட தொன்றில ராகிநல் லுலகினிற் கெழுவுவர் புகழாலே.  07

1186

ஒளிகொள் வாளெயிற் றரக்கனவ் வுயர்வரை யெடுத்தலும் உமையஞ்சிச்
சுளிய வூன்றலுஞ் சோர்ந்திட வாளொடு நாளவற் கருள்செய்த
குளிர்கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்நற் கொழுந்தினைத் தொழுவார்கள்
தளிர்கொள் தாமரைப் பாதங்கள் அருள்பெறுந் தவமுடை யவர்தாமே.  08

1187

பாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும் முத்தினைப் பவளத்தைத்
தேடி மாலயன் காணவொண் ணாதவத் திருவினைத் தெரிவைமார்
கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற் கொழுந்தேயென் றெழுவார்கள்
நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் நிகழ்தரு புகழாரே.  09

1188

கோணல் வெண்பிறைச் சடையனைக் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழுந்திரளைப்
பூணல் செய்தடி போற்றுமின் பொய்யிலா மெய்யன்நல் லருளென்றுங்
காண லொன்றிலாக் காரமண் தேரர்குண் டாக்கர்சொற் கருதாதே
பேணல் செய்தர னைத்தொழும் அடியவர் பெருமையைப் பெறுவாரே.  10

1189

பந்து லாவிரற் பவளவாய்த் தேன்மொழிப் பாவையோ டுருவாருங்
கொந்து லாமலர் விரிபொழிற் கோட்டூர்நற் கொழுந்தினைச் செழும்பவளம்
வந்து லாவிய காழியுள் ஞானசம் பந்தன்வாய்ந் துரைசெய்த
சந்து லாந்தமிழ் மாலைகள் வல்லவர் தாங்குவர் புகழாலே.  11

திருச்சிற்றம்பலம்