சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.115 திருப்புகலூர்


பண் – செவ்வழி

1245

வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர்ப்
பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள்
திங்கள்சூடித் திரிபுரமோ ரம்பாலெரி யூட்டிய
எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்மிடர் கழியுமே.  01

1246

வாழ்ந்தநாளும் மினிவாழு நாளும்மிவை யறிதிரேல்
வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள்
போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன்புக லூரையே
சூழ்ந்தவுள்ளம் உடையீர்காள் உங்கள்துயர் தீருமே.  02

1247

மடையின்நெய்தல் கருங்குவளை செய்யம்மலர்த் தாமரை
புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள்
தொடைகொள்கொன்றை புனைந்தானோர் பாகம்மதி சூடியை
அடையவல்லார் அமருலகம் ஆளப் பெறுவார்களே.  03

1248

பூவுந்நீரும் பலியுஞ் சுமந்துபுக லூரையே
நாவினாலே நவின்றேத்த லோவார்செவித் துளைகளால்
யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கள்தாம்
ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்றுள்ளங் கொள்ளவே.  04

1249

அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி நடையவாய்ப்
பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள்
முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால்
இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச்சிறி தெளியரே.  05

1250

குலவராகக் குலம்இலரு மாகக்குணம் புகழுங்கால்
உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மல ரூறுதேன்
புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக ளுர்தனுள்
நிலவமல்கு சடையடிகள் பாதம்நினை வார்களே.  06

1251

ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்மர வாரமாப்
பூணுமேனும் புகலூர் தனக்கோர் பொருளாயினான்
ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம்
பேணுமேனும் பிரானென்ப ராலெம்பெரு மானையே.  07

1252

உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுய ரிலங்கைக்கோன்
கைகளொல்கக் கருவரை யெடுத்தானையோர் விரலினால்
செய்கைதோன்றச் சிதைத்தருள வல்லசிவன் மேயபூம்
பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே.  08

1253

நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும்
ஆமிதென்று தகைந்தேத்தப் போயாரழ லாயினான்
சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ
பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும்புக லூரையே.  09

1254

வேர்த்தமெய்யர் உருவத் துடைவிட் டுழல்வார்களும்
போர்த்தகூறைப் போதிநீழ லாரும்புக லூர்தனுள்
தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால்
ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே.  10

1255

புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும்புக லூர்தனுள்
வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை
அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம்
பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே.  11

திருச்சிற்றம்பலம்