சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.14 திருவெண்ணியூர்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – வெண்ணிநாயகர், தேவியார் – அழகியநாயகியம்மை.

பண்இந்தளம்

143

சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை உடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே.-01

144

சோதியைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டவெம்
ஆதியை ஆதியும் அந்தமு மில்லாத
வேதியை வேதியர் தாந்தொழும் வெண்ணியில்
நீதியை நினையவல் லார்வினை நில்லாவே.-02

145

கனிதனைக் கனிந்தவ ரைக்கலந் தாட்கொள்ளும்
முனிதனை மூவுல குக்கொரு மூர்த்தியை
நனிதனை நல்லவர் தாந்தொழும் வெண்ணியில்
இனிதனை யேத்துவ ரேதமி லாதாரே.-03

146

மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்
காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக
ஆர்த்தானை அழகமர் வெண்ணியம் மான்றன்னை
ஏத்தாதா ரென்செய்வார் ஏழையப் பேய்களே.-04

147

நீரானை நிறைபுனல் சூழ்தரு நீள்கொன்றைத்
தாரானைத் தையலோர் பாகமு டையானைச்
சீரானைத் திகழ்தரு வெண்ணிய மர்ந்துறை
ஊரானை உள்கவல் லார்வினை யோயுமே.-05

148

முத்தினை முழுவயி ரத்திரள் மாணிக்கத்
தொத்தினைத் துளக்கமில் லாதவி ளக்காய
வித்தினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அத்தனை யடையவல் லார்க்கில்லை அல்லலே.-06

149

காய்ந்தானைக் காமனை யுஞ்செறு காலனைப்
பாய்ந்தானைப் பரியகைம் மாவுரித் தோன்மெய்யின்
மேய்ந்தானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
நீந்தானை நினையவல் லார்வினை நில்லாவே.-07

150

மறுத்தானை மாமலை யைமதி யாதோடிச்
செறுத்தானைத் தேசழி யத்திகழ் தோள்முடி
இறுத்தானை யெழிலமர் வெண்ணியெம் மானெனப்
பொறுத்தானைப் போற்றுவா ராற்ற லுடையாரே.-08

151

மண்ணினை வானவ ரோடுமனி தர்க்குங்
கண்ணினைக் கண்ணனும் நான்முகனுங் காணா
விண்ணினை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியில்
அண்ணலை அடையவல் லார்க்கில்லை அல்லலே.-09

152

குண்டருங் குணமிலா தசமண் சாக்கிய
மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்மின்
விண்டவர் தம்புரம் எய்தவன் வெண்ணியில்
தொண்டரா யேத்தவல் லார்துயர் தோன்றாவே.-10

153

மருவாரு மல்குகா ழித்திகழ் சம்பந்தன்
திருவாருந் திகழ்தரு வெண்ணி யமர்ந்தானை
உருவாரும் ஒண்டமிழ் மாலை யிவைவல்லார்
பொருவாகப் புக்கிருப் பார்புவ லோகத்தே.-11

திருச்சிற்றம்பலம்