சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.19 திருநெல்லிக்கா

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – நெல்லிவனேசுவரர், தேவியார் – மங்களநாயகியம்மை.

பண்இந்தளம்

197

அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி
மறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்த
திறத்தால் தெரிவெய் தியதீ வெண்டிங்கள்
நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.-01

198

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்
மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்
விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்
நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.-02

199

நலந்தா னவன்நான் முகன்றன் தலையைக்
கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்
புலந்தான் புகழா லெரிவிண் புகழும்
நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.-03

200

தலைதா னதுஏந் தியதம் மடிகள்
கலைதான் திரிகா டிடம்நா டிடமா
மலைதா னெடுத்தான் மதில்மூன் றுடைய
நிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.-04

201

தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்
உவந்தான் சுறவேந் தனுரு வழியச்
சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்
நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.-05

202

வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பி
மறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான்
குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும்
நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.-06

203

பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான்
இறைதான் இறவாக் கயிலை மலையான்
மறைதான் புனலொண் மதிமல் குசென்னி
நிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.-07

204

மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னை
மிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக்
குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையை
நிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.-08

205

தழல்தா மரையான் வையந்தா யவனுங்
கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்
அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும்
நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.-09

206

கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சை
எனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்
மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழிய
நினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.-10

207

புகரே துமிலா தபுத்தே ளுலகின்
நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனை
நகரா நலஞா னசம்பந் தன்சொன்ன
பகர்வா ரவர்பா வமிலா தவரே.-11

திருச்சிற்றம்பலம்