சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.22 திருக்குடவாயில்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – கோணேசுவரர், தேவியார் – பெரியநாயகியம்மை.

பண்இந்தளம்

230

திகழுந் திருமா லொடுநான் முகனும்
புகழும் பெருமான் அடியார் புகல
மகிழும் பெருமான் குடவா யில்மன்னி
நிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.-01

231

ஓடுந் நதியும் மதியோ டுரகம்
சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
கூடுங் குழகன் குடவா யில்தனில்
நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.-02

232

கலையான் மறையான் கனலேந் துகையான்
மலையா ளவள்பா கம்மகிழ்ந் தபிரான்
கொலையார் சிலையான் குடவா யில்தனில்
நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே.-03

233

சுலவுஞ் சடையான் சுடுகா டிடமா
நலமென் முலையாள் நகைசெய் யநடங்
குலவுங் குழகன் குடவா யில்தனில்
நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.-04

234

என்றன் உளமே வியிருந் தபிரான்
கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்
குன்றன் குழகன் குடவா யில்தனில்
நின்ற பெருங்கோ யில்நிலா யவனே.-05

235

அலைசேர் புனலன் னனலன் னமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிருங்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே.-06

236

அறையார் கழலன் னமலன் னியலிற்
பறையாழ் முழவும் மறைபா டநடங்
குறையா அழகன் குடவா யில்தனில்
நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே.-07

237

வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்
வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்
வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.-08

238

பொன்னொப் பவனும் புயலொப் பவனுந்
தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்
கொன்னற் படையான் குடவா யில்தனில்
மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.-09

239

வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்
பயிலும் முரையே பகர்பா விகள்பாற்
குயிலன் குழகன் குடவா யில்தனில்
உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே.-10

240

கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்
நெடுமா பெருங்கோ யில்நிலா யவனை
தடமார் புகலித் தமிழார் விரகன்
வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே.-11

திருச்சிற்றம்பலம்