சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.24 திருநாகேச்சரம்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – செண்பகாரணியேசுவரர், தேவியார் – குன்றமுலைநாயகியம்மை.

பண்இந்தளம்
251

பொன்னேர் தருமே னியனே புரியும்
மின்னேர் சடையாய் விரைகா விரியின்
நன்னீர் வயல்நா கேச்சர நகரின்
மன்னே யெனவல் வினைமாய்ந் தறுமே.-01

252

சிறவார் புரமூன் றெரியச் சிலையில்
உறவார் கணையுய்த் தவனே உயரும்
நறவார் பொழில்நா கேச்சர நகருள்
அறவா எனவல் வினையா சறுமே.-02

253

கல்லால் நிழல்மே யவனே கரும்பின்
வில்லான் எழில்வே வவிழித் தவனே
நல்லார் தொழுநா கேச்சர நகரில்
செல்வா எனவல் வினைதேய்ந் தறுமே.-03

254

நகுவான் மதியோ டரவும் புனலும்
தகுவார் சடையின் முடியாய் தளவம்
நகுவார் பொழில்நா கேச்சர நகருள்
பகவா எனவல் வினைபற் றறுமே.-04

255

கலைமான் மறியுங் கனலும் மழுவும்
நிலையா கியகை யினனே நிகழும்
நலமா கியநா கேச்சர நகருள்
தலைவா எனவல் வினைதான் அறுமே.-05

256

குரையார் கழலா டநடங் குலவி
வரையான் மகள்கா ணமகிழ்ந் தவனே
நரையார் விடையே றுநாகேச் சரத்தெம்
அரைசே எனநீங் கும்அருந் துயரே.-06

257

முடையார் தருவெண் டலைகொண் டுலகில்
கடையார் பலிகொண் டுழல்கா ரணனே
நடையார் தருநா கேச்சர நகருள்
சடையா எனவல் வினைதான் அறுமே.-07

258

ஓயா தஅரக் கன்ஒடிந் தலற
நீயா ரருள்செய் துநிகழ்ந் தவனே
வாயா ரவழுத் தவர்நா கேச்சரத்
தாயே எனவல் வினைதான் அறுமே.-08

259

நெடியா னொடுநான் முகன்நே டலுறச்
சுடுமா லெரியாய் நிமிர்சோ தியனே
நடுமா வயல்நா கேச்சர நகரே
இடமா வுறைவா யெனஇன் புறுமே.-09

260

மலம்பா வியகை யொடுமண் டையதுண்
கலம்பா வியர்கட் டுரைவிட் டுலகில்
நலம்பாவியநா கேச்சர நகருள்
சிலம்பா எனத்தீ வினைதேய்ந் தறுமே.-10

261

கலமார் கடல்சூழ் தருகா ழியர்கோன்
தலமார் தருசெந் தமிழின் விரகன்
நலமார் தருநா கேச்சரத் தரனைச்
சொலன்மா லைகள்சொல் லநிலா வினையே.-11

திருச்சிற்றம்பலம்