சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.29 திருப்புகலி – திருவிராகம்

பண்இந்தளம்

306

முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.-01

307

வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.-02

308

பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவு மந்தணன் விருப்பிடம தென்பர்
பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத்
தேவண விழாவளர் திருப்புகலி யாமே.-03

309

மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழும் உருத்திரங்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.-04

310

முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.-05

311

வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.-06

312

நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.-07

313

பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகண் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.-08

314

கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்
நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.-09

315

கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.-10

316 செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.-11

திருச்சிற்றம்பலம்