சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.36 திருஇரும்பூளை – வினாவுரை

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் – காசியாரண்ணியேசுவரர், தேவியார் – ஏலவார்குழலம்மை.

.

383

சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங்கை யொடும் முடனாகி
ஏரா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காரார் கடல்நஞ் சமுதுண்ட கருத்தே.

384

தொழலார் கழலேதொழு தொண்டர்கள் சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகி
எழிலா ரிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
கழல்தான் கரிகா னிடையாடு கருத்தே.

385

அன்பா லடிகை தொழுவீ ரறியீரே
மின்போல் மருங்குல் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே.

386

நச்சித் தொழுவீர்கள் நமக்கிது சொல்லீர்
கச்சிப் பொலிகாமக் கொடியுடன் கூடி
இச்சித் திரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.

387

சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
நற்றாழ் குழல்நங்கை யொடும் முடனாகி
எற்றே யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
புற்றா டரவோடென்பு பூண்ட பொருளே.

388

தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
காடார் கடுவே டுவனான கருத்தே.

389

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

390

ஒருக்கும் மனத்தன்ப ருள்ளீ ரிதுசொல்லீர்
பருக்கை மதவேழ முரித்துமை யோடும்
இருக்கை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே.

391

துயரா யினநீங்கித் தொழுந்தொண்டர் சொல்லீர்
கயலார் கருங்கண்ணி யொடும் முடனாகி
இயல்பா யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.

392

துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண்டர் கள்சொல்லீர்
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
இணையில் லிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.

393

எந்தை யிரும்பூளை யிடங்கொண்ட ஈசன்
சந்தம் பயில்சண்பை யுண்ஞான சம்பந்தன்
செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார்
பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.

திருச்சிற்றம்பலம்