சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாம் திருமுறை

122 பதிகங்கள் – 1331 பாடல்கள் – 90 கோவில்கள்


2.6 திருவையாறு

பண் – இந்தளம்

55

கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்
ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார்
பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே.-01

56

தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவே
பின்னு முன்னுஞ் சிலபேய்க் கணஞ்சூழத் திரிதர்வர்
துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடிப் பூசுவர்
அன்னம் ஆலுந் துறையானும் ஐயாறுடை ஐயனே.-02

57

கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலை
மாறி லாருங்கொள் வாரிலை மார்பி லணிகலம்
ஏறும் ஏறித் திரிவரிமை யோர்தொழு தேத்தவே
ஆறும் நான்குஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே.-03

58

பண்ணின் நல்லமொழி யார்பவ ளத்துவர் வாயினார்
எண்ணின் நல்லகுணத் தாரிணை வேல்வென்ற கண்ணினார்
வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுகந் தானும் ஐயாறுடை ஐயனே.-04

59

வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்
தேன்நெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும் பின்தெளி
ஆனஞ் சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே.-05

60

எங்கு மாகி நின்றானும் இயல்பறி யப்படா
மங்கை பாகங் கொண்டானும் மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்
அங்க மாறுஞ் சொன்னானும் ஐயாறுடை ஐயனே.-06

61

ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாஞ்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்
ஆதி யாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே.-07

62

குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய்
விரவு நீறணி வார்சில தொண்டர் வியப்பவே.
பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால்
அரவ மார்த்துகந் தானும் ஐயாறுடை ஐயனே.-08

63

உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன்
வரைசெய் தோளடர்த் தும்மதி சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்
அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே.-09

64

மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்
காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர்
ஆல நீழ லுளானும் ஐயாறுடை ஐயனே.-10

65

கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால்
மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யல
மைகொள் கண்டத் தெண்டோ ள்முக் கணான்கழல் வாழ்த்தவே
ஐயந் தேர்ந்தளிப் பானும்ஐ யாறுடை ஐயனே.-11

66

பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினைக்
கலிக டிந்தகை யான்கடல் காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய்
மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே.-12

திருச்சிற்றம்பலம்