திருநாவுக்கரசு நாயனார்

திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளாண் மரபில் குறுக்கையர் குடியிலே புகழனார்க்கும் மாதினியார்க்கும் மகளாகத் திலகவதியார் பிறந்தார். சில ஆண்டுகள் கழித்து அவர்க்குத் தம்பியாராக மருள்நீக்கியார் தோன்றினார். திலகவதியாரை மணம் பேசிய கலிப்பகையார் அரசர்க்குத் துணையாகப் போர் புரிய சென்று போர்களத்தில் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார். தாய்தந்தையை இழந்து தளர்வுறும் தம்பியார் மருள்நீக்கியாரைக் காத்தல் பொருட்டுத் திலகவதியார் உயர் தாங்கி இருந்தார்.

     உலக நிலையாமையை உணர்ந்த மருள்நீக்கியார் அறம் பல புரிந்து சமண சமயம் சார்ந்து தருமசேனர் என அழைக்கப் பெற்றார். திருவதிகை வீரட்டானத்து இறைவனை வணக்கித் தொண்டு புரிந்திருந்த திலகவதியார் தம்பியைச் சமண சமத்தில் இருந்து மீட்டு அருளும்படி இறைவனை வேண்டிக் கொண்டார். இறைவன் அருளால் தருமசேனர்க்குச் சூலை நோய் தோன்றி வருத்தியது.

     சமணர்களின் மந்திர தந்திரங்களாலும், மருந்துகளாலும் அந்நோய் தீராமையால் தருமசேனர் ஒருவரும் அறியாதபடி பாடலிபுத்திரத்தைச் சமணர் விட்டு நீங்கித் திருவதிகையை அடைந்து திலகவதியாரைப் பணிந்து அவர் அளித்த திருநீற்றை உருவார அணிந்து திருவதிகை வீரட்டானரை வணங்கினார். “கூற்றாயினவாறு விலக்ககிலீர்” எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினார். சூலை நோய் நீங்கியது. இறைவனும் திருநாவுக்கரசு என்று சிறப்புப் பெயர் அளித்தார்.

     திருநாவுக்கரசர் சைவ சமயத்தைச் சார்ந்ததை அறிந்த சமணர்கள் தம் சமயம் அழியுமே என அஞ்சினர். அச்சமயத்தினை சார்ந்த பல்லவ அரசனிடம் முறையிட்டனர். அவர்கள் சொல் கேட்ட பல்லவன் நாவுக்கரசரை நீற்றறையில் இடச்செய்தான். நீற்றறை, ஈசன் இணையடி நீழல் எனக் குளிர்ந்தது. நஞ்சு கலந்த பால் சோற்றை ஊட்டுவித்தனர். நாவரசர்க்கு நஞ்சும் அமிழ்தாயிற்று. யானையைவிட்டு இடறச் செய்தனர். “அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதுமில்லை” என்ற உறுதியுடனிருந்த நாவுக்கரசை வணங்கிய யானை, பாகர் முதலியோரைக் கொன்று ஓடியது. இத்தனை இடையூறுகளிலும் தப்பிய நாவுக்கரசரைக் கல்லோடு சேர்த்துக் கட்டி கடலில் தள்ளினர். அஞ்செழுத்தோதிய நாவுக்கரசர்க்குக் கல்லே தெப்பமாய் மிதக்கத் திருப்பாதிரிப்புலியூர் அருகே கரையேறியப் பெருமானை வணங்கினர்.

     பின்பு திருப்பெண்ணாகடத்தில் சிவபெருமானை வேண்டிச் சூலமும் இடபமும் பொறிக்கப்பெற்றார். தில்லையை வணங்கிச் சீகாழிப்பதியில் ஆளுடைய பிள்ளையாரைக் கண்டு நட்பு கொண்டு நல்லூரில் திருவடி சூட்டப்பெற்றார். திங்களுரில் அப்பூதியடிகள் இல்லத்தில் தங்கி அரவு தீண்டியிருந்த மூத்த திருநாவுக்கரசை உயிர் பெற்றெழுச் செய்தார்.

     திருஞானசம்பந்தருடன் தலயாத்திரை செய்து பஞ்ச நாளில் திருவீழிமிழலையில் படிக்காசு பெற்று அடியார்களை உண்பித்தார். திருமறைக்காட்டில் மறைகளால் பூசிக்கப்பெற்று அடைக்கப் பெற்றிருந்த திருக்கதவினைப் பதிகம் பாடித் திறப்பித்தார். பழையாரையில் சமணர்களால் வடதளி மறைக்கப்பட்டிருந்த நிலையில் உண்ணாநோன்பிருந்து அத்திருக்கோயிலை வெளிப்படுத்தினார். திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லும்போது இறைவரே உடன் வந்து பொதிசோறளிக்கப் பெற்றார்.

     தொண்டை நாட்டுத் தலங்களை வணங்கித் திருக்காளத்தி மலையை வணங்கிய போது திருக்கயிலாயத்தைக் கண்டு வழிபட வேண்டும் என்னும் எண்ணம் உள்ளத்தில் தோன்றவே வடநாட்டு யாத்திரையை மேற்கொண்டார். நாவுக்கரசர் வடநாட்டில் வாரணாசி முதலிய தலங்களை வழிபட்டுக் கயிலைமலையை நோக்கிக் காடுமலை முதலியவற்றைக் கடந்து செல்லும் வழியில் உடல் தளர்ச்சியுற்றாராக அந்நிலையில் சிவபெருமான் தவமுனிவராகத் தோன்றி அவரைத் தடுத்து நிறுத்தி விண்ணிடை மறைத்து நின்று, “அருகிலுள்ள தடாகத்தில் மூழ்கித் திருவையாற்றில் கயிலைக்கோலம் காண்பாயாக” என அருள் புரிந்தார். அவ்வாறே அக்குளத்தில் மூழ்கித் திருவையாற்றில் எழுந்து திருக்கயிலாயக் காட்சியைக் கண்டு மகிழ்ந்தார். திருப்பூந்தருத்தியில் திருமடம் அமைத்தார். பாண்டி நாட்டில் சமணரை வாதில் வென்று திருநீற்றின் ஒளி பரப்பிய திருஞானசம்பந்தர் திருப்பூந்துருத்தியில் திருநாவுக்கரசரைக் கண்டு மங்கையர்கரசியார், நீன்றசீர் நெடுமாறர், அமைச்சர் குலச்சிறையார் ஆகியோரது அன்பின் திறத்தை எடுத்துரைத்தார். நாவுக்கரசர் பாண்டி நாட்டுத் தலங்களை வழிபட எண்ணித் திருப்புத்தூரை இறைஞ்சி மதுரைத் திருவாயிற் பெருமானை வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். திருப்பூவனம் திருவிராமேச்சுரம் நெல்வெலு, கானப்பேர் முதலிய தலங்களை வழிபட்டுத் திருப்புகலூரை அடைந்தார். புகலூர்ப் பெருமானைப் போற்றி உழவாரப்பணி புரிந்தார். தம்மைப் புகலூர் இறைவன் திருவடிக்கீழ் விரைவில் சேர்த்துக் கொள்வான் என்னும் முன்னுணர்வு மூளப்பெற்று சித்திரை மாதம் சதயத்திருநாளில் “எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ” என்னும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடிப் புண்ணியா உன்னடிக்கீழ்ப் போதுகின்றேன் எனப் புகன்று நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகித் திருப்புகலூர் அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்.

திருச்சிற்றம்பலம்