சிவ சிவ

திருச்சிற்றம்பலம்

திருமூலர் பெருமான் அருளிய பத்தாம் திருமுறை

திருமந்திரம்

1237 பதிகங்கள் – 3000 பாடல்கள் 


10.1 முதல் தந்திரம் – 22. கல்லாமை


திருச்சிற்றம்பலம்


 

310.
கல்லா தவரும் கருத்தறி காட்சியை
வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகி லாரே. 1

311.
வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே. 2

312.
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே. 3

313.
கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்
கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்
கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே. 4

314.
நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. 5

315.
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. 6

316.
கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது
கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே. 7

317.
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. 8

318.
கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. 9

319.
ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வறி யாரே. 10

திருச்சிற்றம்பலம்