குலச்சிறை நாயனார்

பாண்டிநாட்டு மணமேற்குடியில் தோன்றியவர் குலச்சிறையார். இவர் பாண்டியன் நின்றசீர் நெடுமாறனுக்கு அமைச்சர். கூன்பாண்டியனாய்ச் சமண சமயத்தில் சேர்ந்திருத்த பாண்டிய மன்னனுக்கு திருஞானசம்பந்தப் பிள்ளையாரால் சைவனாக மாறி உய்ய உதவியாய் மங்கையர்கரசியாரது சைவத் தொண்டுக்குப் பாதுகாவலாக இருந்தவர் அமைச்சர் குலச்சிறையாராவர். குலவேறுபாடு கருதாது சிவனடியார் யாவராயினும் அவர்க்கு அடித்தொண்டு புரியும் ஆராத பேரன்புடைய இவர், திருஞானசம்பந்தர் பால் வாதில் தோல்வியுற்ற சமரணர்கள் தாம் செய்து கொண்ட சபதத்தின்படி கழுவேறக் கண்டார். தென்பாண்டி நாடு முழுவதும் சிவநெறி பரவத் தொண்டுபுரிந்த குலச்சிறையார் ஆலவாயரன் திருவடியினை இடைவிடாது போற்றிச் சிவப்பேறு அடைந்தார்.